Published on 16/09/2023 | Edited on 16/09/2023

ஈரோடு பெருந்துறை சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு நோய் காரணமாக ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையின் முதல் தளத்தில் இருக்கும் நோயாளி ஒருவரின் சிகிச்சை அறையில் உள்ள ஜன்னலில், 8 அடி நீளத்தில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதைக் கண்ட அந்த நோயாளி அலறியடித்துச் சென்று மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த பாம்பு பிடி வீரர் யுவராஜ், ஜன்னலில் படுத்திருந்த பாம்பை லாவகமாகப் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அப்போது, பிடிபட்ட பாம்பு 8 அடி நீளம் உள்ள மஞ்சள் சாரை என்றும், மருத்துவமனை அருகில் உள்ள முட்புதரில் இருந்து வந்திருக்கலாம் என்றும் பாம்பு பிடி வீரர் யுவராஜ் தெரிவித்தார்.