Skip to main content

ஆண்மைக்கு கடல் வெள்ளரி... கடத்தியது தப்பா..? சாபத்தை வாங்காதீங்க சார்..!

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

கடந்த 2001 ஜுலை 11ம் தேதியன்றே கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பசு உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்தாலும் ஆண்மைக்கு உகந்தது என்பதால் கடல் அட்டைக்கான தேவை இன்று வரை இருப்பதால் அதற்காக கடத்தலும் தொடர்கின்றது. அந்த வகையில், இலங்கைக்கு கடத்த இருந்த 3 டன் கடல் அட்டைகளுடன் கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்துள்ளனர் ராமேஸ்வரம் வனத்துறைத்துறையினர்.

 

smuggling incident in ramanathapuram

 

ஆண்மையை அதிகரிக்கவல்லது என சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உள்ள மக்களுக்கு கடல் அட்டை வரப்பிரசாதமான ஒன்று. வழுவழுப்பான தோலை உடையதும், நீண்ட உருளை வடிவில் வெள்ளரி போன்றும் இருக்கும் கடல் அட்டை  முட்தோலி வகையைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினமே. கடலின் ஆழப்பகுதியில் வாழும் இக்கடல் அட்டையை வேட்டையாடுவதெற்கென மீனவர்களும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டு. தங்கம் கடத்தலுக்கு இணையாக தடைவிதிக்கப்பட்ட இந்த கடல் அட்டையை கடத்துவோர் இங்கு அதிகம் என்பதால் வனத்துறையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கடத்தலை தடுப்பதும் வாடிக்கையான ஒன்று.

 

smuggling incident in ramanathapuram

 

இந்நிலையில், மன்னார் வளைகுடா கடல்  பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக  இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக மண்டபம் வனத்துறை வனச்சரகர் வெங்கடேஷிற்கு  கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை முதல் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே கடலில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நாட்டு படகை சோதனை செய்ய முயன்ற போது, இருவர் படகில் இருந்து கடலில் குதித்து தப்பிக்க முயற்சித்தனர். தப்பிய வேதாளை பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் கருப்பையா ஆகிய இருவரையும்  மடக்கி பிடித்த வனத்துறையினர் நாட்டு படகை சோதனையிட, படகில்  261 மூடைகளில் 3,200 கிலோ  எடை கொண்ட பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தல்கார்களுடன் கடல் அட்டைகளையும் அட்டைகளையும் கைப்பற்றியவர்கள், நாட்டுபடகையும் பறிமுதல் செய்து மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் படகின் மதிப்பு 40 லட்சம் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது. அதே வேளையில், ஆண்மைக்கு பயன்படும் மருந்தான கடல் அட்டையை கடத்தியது தப்பா..? சாபத்தை வாங்காதீங்க சார்.! என கடத்தல்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.