
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், ஷார்ஜா போன்ற வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்கு வரும் பயணிகளில் சிலர் தங்கம் கடத்திவருவதும், அதனை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்துவருகிறது.
சிலர் மறைமுகமாகவும், சிலர் கழுத்து மற்றும் கைகளில் தங்கள் நகைகளைப்போல் அணிந்துவந்தும் தங்கத்தைக் கடத்துகின்றனர். அப்படி தங்கள் நகைகளைப் போல் அணிந்து வருபவர்கள் விமான நிலையத்தின் வெளியே தயாராக இருக்கும் தரகர்களிடம் தந்து பணத்தை வாங்கிக்கொள்வர். இப்படி தங்க நகைகளை வாங்கிக்கொண்டு பணமாக தருவதற்கு திருச்சி விமான நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட தரகர்கள் செயல்படுகின்றனர்.
இவர்களைக் குறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையருக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் விமான நிலைய வளாகத்தில் காவலர்கள் இன்று (20.11.2021) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தங்க நகைகளை வாங்குவதற்காக காத்திருந்த தரகர்களான திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்த மெஹபூப் கான், சிவகங்கையைச் சேர்ந்த ஜவஹர் சாதிக், திருவாரூரைச் சேர்ந்த சிராஜ்தீன், திருவாரூரைச் சேர்ந்த அபுதாஹீர், நிசார் அகமது, ஷாஜகான் ஆகிய 6 பேரைக் காவல்துறையினர் பிடித்தனர். பிடிபட்ட அவர்களை திருச்சி விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பிடிபட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில், வெளிநாட்டிலிருந்து விமானங்களில் வந்தவர்களிடம் தங்க நகைகளை வாங்கியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து ரூ. 48.75 லட்சம் மதிப்பிலான 965 கிராம் தங்க நகைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் ஆறு பேர் மீதும் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.