
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கவணை ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் இயங்கிவரும் சின்ன பண்டாரங்குப்பம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட நியாயவிலைக்கடை அமைந்துள்ளது. இதில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் நேற்று வழங்கிவிட்டதாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் செல்ஃபோன்களுக்கும்குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால், அதிர்ந்துபோன பொதுமக்கள் இன்று நியாயவிலைக்கடை முன்பு திரண்டனர். சுமார் 4 மணி அளவில் நியாயவிலைக்கடை விற்பனையாளர் ராதா வந்துள்ளார். அப்போது அனைவருக்கும் சர்க்கரை மட்டும் வழங்கியுள்ளார். மேலும் ஒவ்வொருவருக்கும் ஏற்கனவே வீட்டில் தயாராக எழுதிக்கொண்டு வந்த பில்லை அனைவருக்கும் வழங்கியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், "ஏற்கனவே எங்களுக்குப் பொருட்கள் வழங்கிவிட்டதாக குறுஞ்செய்திவந்துள்ளது. நீங்களோ, இன்று சர்க்கரை மட்டும் வழங்குகிறீர்கள்" எனக் கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு அவர் முறையான பதிலை கூறாமல் உங்களால் முடிந்ததைப் பாருங்கள் எனக் கூறியுள்ளார் ராதா.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை கடையின் உள்ளே சிறை வைத்து வெளியில் பூட்டு போட்டு கடையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
சுமார் 4 மணி நேரம் நியாயவிலைக்கடை விற்பனையாளரை கடையின்உள்ளே வைத்துப் பூட்டிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  
 Follow Us