Skip to main content

'ஸ்மார்ட் ட்ரீ' பெயரில் மக்கள் பணம் விரயம்; சேலம் மாநகராட்சி துக்ளக் தர்பார்!

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

 

சேலத்தில், வாகன நெரிசல் மிகுந்த, போக்குவரத்து சிக்னல் அருகே ஸ்மார்ட் ட்ரீ என்ற பெயரில் யாருக்கும் பயன்படாத சோலார் மரத்தை நட்டு, மக்கள் பணத்தை விரயமாக்கி இருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.
 

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சேலத்தை சீர்மிகு மாநகரமாக்கும் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. தரமான சாலைகள், சாக்கடைக் கால்வாய்கள், சுகாதார மையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக்கூட முழுமையாகவும், சரியான வகையிலும் பூர்த்தி செய்து தருவதற்கே தகிடு தத்தம் போட்டு வரும் சேலம் மாநகராட்சிக்கு, சீர்மிகு மாநகரம் திட்டம் என்பது குருவித் தலையில் பனங்காயை வைத்த கதையாக விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது. 

 

smart charger-web



அதனால்தான், மைய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு முதல்கட்டமாக ஒதுக்கிய 111 கோடியை எப்படி செலவழிப்பது என்பதில்கூட சரியான திட்டமிடல் இல்லாமல், பணத்தை வைத்துக்கொண்டு இரண்டு ஆண்டுகள் தடுமாறிக் கொண்டிருந்தது. அதன்பிறகு, தற்காலிக பேருந்து நிலையம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், நுண்ணுயிர் உரக்கிடங்கு, சோடியம் விளக்குகளை அகற்றிவிட்டு எல்இடி விளக்குகள் பொருத்தம் என சில பணிகளை 18.62 கோடி ரூபாயில் செய்தது.


 

 

இது ஒருபுறம் இருக்க, எல்லோருக்கும் கட்டணமின்றி வைஃபை வசதி கிடைக்கும் நோக்கில், சேலம் மாநகரில் ஸ்மார்ட் ட்ரீ என்ற பெயரில் ஒரு சோலார் (சூரிய சக்தியில் இயங்குவது) மரத்தை நிறுவியிருக்கிறது மாங்கனி மாநகராட்சி. முற்றிலும் சூரிய மின்சக்தியில் இயங்கக்கூடியது இந்த மரம். இந்த மரத்தின் அடியில் பொதுமக்கள் அமர ஒரு நீண்ட பலகையும் போடப்பட்டு உள்ளது. அந்தப் பலகையின் முன்புறத்தில், செல்போன் சார்ஜர் 'பின்' சொருகும் வகையில் இரண்டு பிளக் பாயிண்டுகளும் தரப்பட்டு உள்ளன. பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் அந்த ஸ்மார்ட் ட்ரீக்கு அடியில் சென்று, செல்போன்களுக்கு கட்டணமின்றி சார்ஜர் போட்டுக் கொள்ளலாம். அதேபோல் கட்டணமின்றி வைஃபை சேவையையும் பெறலாம். இவைதான் இந்த ஸ்மார்ட் ட்ரீ திட்டத்தின் சிறப்பு அம்சங்கள். 

 

smart charger-web


 

உண்மையைச் சொல்லப்போனால், சேலத்தில் இப்படி ஒரு ஸ்மார்ட் ட்ரீ இருப்பதே பலருக்கும் தெரியாது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானாவில் இருந்து மாநகராட்சி மைய அலுவலகம் செல்லும் வழியில், சிஎஸ்ஐ சர்ச் சுற்றுச்சுவரை ஒட்டி, மாநகராட்சி கட்டடத்திற்கு எதிரில், இந்த ஸ்மார்ட் ட்ரீ நிறுவப்பட்டு உள்ளது. இதற்கான செலவு 5.50 லட்சம் என்கிறது சேலம் மாநகராட்சி. இந்த மரம் நிறுவப்பட்டதில் இருந்து, இதுவரை ஒருவர்கூட அதன் சேவைகளைப் பயன்படுத்தியதாக எந்தப் பதிவுகளும் இல்லை. 
 

அது மட்டுமல்ல.
 

இந்த ஸ்மார்ட் ட்ரீ நிறுவப்பட்ட இடமானது எப்போதும் வாகன நெரிசல் மிகுந்த மற்றும் போக்குவரத்து சிக்னல் உள்ள பகுதியாகும். அதனால் வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, தங்கள் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றுவது என்பதும், வைஃபை இணைப்பு பெற்று பொழுதுபோக்குவது என்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது. 


 

 

நாமும் அந்த ஸ்மார்ட் ட்ரீயின் அடியில் சென்று வைஃபை சேவையைப் பெற முயற்சித்தால், அதற்கான இணைப்பு கிடைக்கவில்லை. ஒரு காக்கா, குருவிக்குக்கூட பலன் தராத ஸ்மார்ட் ட்ரீ என்ற பெயரில், சேலம் மாநகராட்சி மக்களின் பணத்தை விரயமாக்கி உள்ளது. 
 

துக்ளக் தர்பார் நடத்துகிறது சேலம் மாநகராட்சி.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் மாநகராட்சிக்கு புதிய ஆணையராக பாலசந்தர் ஐஏஎஸ் நியமனம்!      

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Balachandar IAS appointed as the new Commissioner of Salem Corporation

 

சேலம் மாநகராட்சி புதிய ஆணையராக பாலசந்தர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  சேலம் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த கிறிஸ்துராஜ், கடந்த மே மாதம் 16 ஆம் தேதி, திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, காலியாக இருந்த சேலம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பை, துணை ஆணையர் அசோக்குமார் கூடுதலாகக் கவனித்து வந்தார்.     

 

இந்நிலையில், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலராகப் பணியாற்றி வந்த கூடுதல் ஆட்சியர் பாலசந்தர் ஐஏஎஸ், சேலம் மாநகராட்சி ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர், சேலம் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

Next Story

சாக்கடை சுத்தப்படுத்தும் பணியில் தனிநபரை ஈடுபடுத்தினால் கிரிமினல் நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர்    

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

 Corporation warning criminal action will be taken individual involved sewer work
கோப்புக்காட்சி

 

சாக்கடைக் கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனி நபர்களை ஈடுபடுத்துவோர் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என சேலம்  மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார்.

 

சேலத்தில் சாக்கடைக் கால்வாயை ஒருவர் பாதுகாப்பு உபகரணங்களின்றி,  சுத்தம் செய்யும் காணொலி காட்சி, மாநகராட்சி நிர்வாகத்துடன் தொடர்ப்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரவியது. இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் விசாரணை நடத்தினார். காணொலி காட்சியில் உள்ள நபர் மாநகராட்சி பணியாளர் அல்லாத தனி நபர் என்பது தெரிய வந்தது. அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையின் பேரில், அந்த நபர்  சாக்கடை கால்வாயில் இறங்கி சுத்தம் செய்ததும் தெரிய வந்தது.     

 

இதையடுத்து, சேலம் மாநகராட்சியின் 60 கோட்டங்களிலும் மாநகராட்சி அனுமதியின்றி, தனிநபர்களை வைத்து சாக்கடைக் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை தவிர்க்க வேண்டும் என்று ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். கழிவுநீர்க் கால்வாய்களில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டு சுத்தம் செய்ய வேண்டியிருப்பின், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கோட்டத்தின்  சுகாதார மேற்பார்வையாளர் அல்லது சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார அலுவலரிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும்.  

 

மாநகராட்சி அனுமதியின்றி தனிநபர்களைக் கொண்டு சுத்தப்படுத்தும் செயலில் ஈடுபடுத்துவோர் மீது குற்றவழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாநகராட்சியில் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், தளவாடப்  பொருள்கள் போதிய அளவில் வழங்கப்பட்டு உள்ளன. தூய்மைப் பணியில் ஈடுபடும்போது பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்ய தனிநபரை அனுமதிப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார்.