Skip to main content

“2030 ஆண்டுக்குள் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் கொண்டுவரப்படும்” - பிரதமர் மோடி உறுதி

Published on 26/08/2022 | Edited on 26/08/2022

 

smat india hackaton

 

2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 6G தொழில்நுட்பம் இந்தியாவில் கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

 

ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் நிகழ்ச்சியை மத்திய அரசு 2017 ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. சமூக பிரச்சனைகள் அரசு நிர்வாகம் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடக்கும். 2022ம் ஆண்டுக்கான ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. நாடு முழுதும் 75000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் காணொளிக்காட்சியின் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். 

 

நிகழ்ச்சியில் இணையம் வாயிலாக பேசிய அவர் கடைசி ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் இந்திய பல்வேறு துறைகளில் நிறைய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. பல துறைகளில் புரட்சிகள் நடந்துள்ளன. தொழில் நுட்பத்துறை, விவசாயம், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் புரட்சி ஏற்பட்டு அவைகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு அடைந்துள்ளதாக" கூறியுள்ளார். 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம்  கொண்டுவரப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 75000 மற்றும் 50000 வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவர்கள் இன்று அறிவிக்கப்படுவார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் வருந்துவார்கள்” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 PM Modi says Opposition parties will regret the Supreme Court verdict at electoral bond

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

முதற்கட்ட வாக்குப்பதிவானது, தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், மிசோரம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் உள்ள மொத்தம் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு உள்பட மாநிலங்களில் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் தொடங்க இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. 

அந்த வகையில், இந்தியா முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “தேர்தல் பத்திரங்கள் மூலம் நீங்கள் பணத்தின் வழியைப் பெறுகிறீர்கள். எந்த நிறுவனம் கொடுத்தது? எப்படி கொடுத்தார்கள்? எங்கே கொடுத்தார்கள்? அதனால்தான் நான் சொல்கிறேன், இனியாவது எதிர்க்கட்சிகள் நேர்மையாக நடந்து கொள்ள வெண்டும். தேர்தல் பத்திரங்களை ரத்து செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் அனைத்தும் வருந்தும்.

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற சட்டங்கள் ஏன் அரசால் கொண்டு வரப்படவில்லை. மாறாக, தேர்தல் கமிஷன் சீர்திருத்தங்கள் என அரசால் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தேர்தல் கமிஷனர்களாக்கப்பட்டனர். அந்த அளவில் எங்களால் விளையாட முடியாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எங்களின் அர்ப்பணிப்பு. நாட்டில் பலர் களமிறங்கியுள்ளனர். மிகவும் நேர்மறையான மற்றும் புதுமையான பரிந்துரைகள் வந்துள்ளன. இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு நிறைய நன்மை கிடைக்கும். 

துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்களில், ஒரு வார்த்தையில் எந்த அர்ப்பணிப்பும் பொறுப்பும் இல்லை. ராகுல் காந்தியின் ஒவ்வொரு எண்ணமும், முரண்படும் பழைய வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும்போது, ​​இந்தத் தலைவர் பொதுமக்களை ஏமாற்றப் பார்க்கிறார் என்று நினைக்கிறார்கள். சமீபத்தில், ஒரு அரசியல்வாதி ‘வறுமையை ஒரே அடியில் அகற்றுவேன்’ என்று சொல்வதைக் கேட்டேன். 5-6 தசாப்தங்களாக ஆட்சியில் இருக்க வாய்ப்பு கிடைத்தவர்கள், இப்படிச் சொல்லும்போது, ​​இந்த மனிதன் என்ன சொல்கிறார் என்று நாடு நினைக்கிறது?” என்று கூறினார். 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.