small and micro companies are very important

மதுரையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் 1,295 சதுர அடி பரப்பளவில் 3 கோடியே 20 இலட்சம் மதிப்பில் 100 பெண் பயிற்சியாளர்கள் தங்கக் கூடிய 25 அறைகளுடன் கட்டப்பட்ட அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலைய விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Advertisment

இதனையடுத்து வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “மதுரையில் 48வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் 3 அல்லது 4வது வாரத்தில் நடைபெறும். பாராளுமன்ற கூட்டம், சுதந்திர தினம் வருவதால் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தள்ளி போகிறது. அதிமுக ஆட்சியில் ஊழலில் கொடூர ஊழல் நடந்துள்ளது. கால நிலை மாற்றத்தினால் மதுரை மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இந்த மழையினை வைத்து நிறைய கற்றுக் கொண்டோம். மழையினால் பாதிப்புகள் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதிமுக ஆட்சி காலத்தில் மதுரையில் 10 ஆண்டுகளில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை. மதுரையின் குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்திற்காக மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு முதல் கட்டமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்திற்குள் மதுரையில் குடிநீர், பாதாள சாக்கடைக்கு போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் குறித்து பேசுவதற்கு நேரம் போதாது. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடைபெறுகிறது. மழை நீரை விரைவாக உறிஞ்சி எடுக்க சூப்பர் சக்கரலாரி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை மாநகராட்சிக்கு மேலும் சூப்பர் சக்கரலாரிகள் வாங்கப்படும். பெரிய முதலீட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க முன் வந்தாலும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிக முக்கியமானது. தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உருவாக்கி வருகிறது. தமிழகத்தில் புதிய யுக்தியுடன் 2 இலட்ச ரூபாய் இருந்தால் தொழில் தொடங்கலாம். ஸ்டார்ட் ஆஃப் தமிழ்நாடு திட்டத்தில் சமூக நீதி காக்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் தொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்டார்ட் ஆஃப் தமிழ்நாடு திட்டத்தால் 2 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான புதிய சிறு, குறு நிறுவனங்கள் உருவாகும்” என கூறினார்.