Skip to main content

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி !எதிர்ப்பதாக நாடகமாடும் எடப்பாடி அரசு ! மக்கள் அதிகாரம் கண்டனம்

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
marriage

 

மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மீண்டும் திறக்க முயலும் ஸ்டெர்லைட் ஆலையின் சதி வேலைகளை, பொய் பிரச்சாரங்களை புறக்கணிக்க வேண்டும். கட்சி வேறுபாடுகளை கடந்து அனைவரும் போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது ’மக்கள் அதிகாரம்’.

 

இது குறித்து மக்கள் அதிகாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ‘’
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி நடக்கிறது. அதற்கு எடப்பாடி அரசு மறைமுகமாக துணை நிற்கிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் தங்கள் உயிரைத் தியாகம் செய்தபின், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி அறிவித்தார். அரசு தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது அரசின் கொள்கை முடிவுதான் என விளக்கமளித்தார்.

 

 ஸ்டெர்லைட்டை மூட பலவீனமான ஒர் அரசாணையை போட்டுவிட்டு தற்போது பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடத்துகிறோம் என நாடகமாடுகிறது தமிழக அரசு. அப்போதே அரசாணை மட்டும் போதாது என்றும், கொள்கை முடிவு எடுத்து சட்டமாக இயற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உட்பட பல தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால் எடப்பாடி அரசு ஏறெடுத்தும் பார்க்க வில்லை.

 

  விதிமுறை மீறல், சுற்றுசூழல் மாசு, என்பது மட்டுமல்ல, ஸ்டெர்லைட்டால் நிரந்தர அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.   ஸ்டெர்லைட் போன்று தாமிர உருக்கு ஆலைகளுக்கு இனி தமிழகத்தில் அனுமதி கிடையாது என்ற கொள்கை முடிவு எடுத்து அதற்கான சட்டம் இயற்றுவதுதான்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஒரே வழி. எவ்வாறு மராட்டிய மாநிலம், ரத்தினகிரியில் கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடினார்களோ அதே போல் தமிழகத்தில் மூட வேண்டும்.
தமிழக அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் வேதாந்தா கம்பெனி, டெல்லி தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்து, நிர்வாகக் காரணங்களுக்காக ஆலையை திறக்கலாம் என உத்தரவை பெற்று, சீல்வைத்த ஆலையை மீண்டும் திறந்து விட்டது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வல்லுனர் குழு மூலம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து திறக்க முடிவு எடுக்கலாம் என்ற உத்தரவைப் பெற்றதுடன் அதில் தமிழக நீதிபதி இடம் பெறக்கூடாது எனச் சொல்லி அதிலும் வெற்றி பெற்றுள்ளது. 

 

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வருகிற 22 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை ஒரு குழு தமிழகம் வருகிறது.   ஏற்கனவே குமரெட்டியபபுரம் உட்பட அருகில் உள்ள கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீரில் ஆர்சனிக் என்ற கொடிய நச்சு, அளவுக்கு அதிகமாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் கெட்டுவிட்டது என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை ஆய்வு செய்து நிலத்தடி நீர் மாசுபட்டதற்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல என சமீபத்தில் அறிக்கை அளித்து வேதாந்தாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட்டை மூடுவதில் உறுதியாக இருக்கிறோம் எனச் சொல்லும் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது.?

 

அரசு சீல் வைத்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை என தினந்தோறும் நாளிதழ்களில் வேதாந்தா நிறுவனம் விளம்பரம் கொடுத்து வருகிறது. மேலும் பணத்தை வாரி இறைத்து விவசாய சங்கம் என்ற பெயரில் உள்ளவர்கள், லாரி உரிமையாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், காண்டராக்டர்கள், ஆகியோரை வைத்து ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க  மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்க வைத்து மக்களை சாதி ரீதியாகப் பிளவுபடுத்துவதுடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்களிடம் எதிர்ப்பு இல்லை என காட்ட முயல்கிறது. அதற்கு அரசும் துணை போகிறது ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என துண்டு பிரசுரம் கொடுத்தால் கூட, கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். 

 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால் ஏன் அதையே கொள்கை முடிவாக எடுக்க மறுக்கிறது?. ஆலையை மூட வேண்டும் என  மக்கள் கோருவதற்கும் போராடுவதற்கும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது.?  பொய் வழக்கு போட்டு கைது செய்து ஏன் அச்சுறுத்துகிறது?. 

 

மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மீண்டும் திறக்க முயலும் ஸ்டெர்லைட் ஆலையின் சதி வேலைகளை, பொய் பிரச்சாரங்களை புறக்கணிக்க வேண்டும். கட்சி வேறுபாடுகளை கடந்து அனைவரும் போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்க வேண்டும்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைமடைக்கு வராத காவிரியை கடலுக்கு திருப்பி விடும் அரசு... கொந்தளித்த மக்கள் அதிகாரம்!

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

காவிரி ஆறு எப்போதும் தண்ணீர் இல்லாம் வறண்டு போய் இருக்கும் ஆனால் தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டு கடந்த 25 நாட்களுக்கு மேலாக காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் காவிரி ஆற்றை நம்பி இருக்கும் கடைமடை கிளை கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விடாமல் கொள்ளிடத்தில் தண்ணீரை திறந்து விட்டு யாருக்கும் பயன் இல்லாமல் கடலில் கலக்க வைக்கிறார்கள். இந்நிலையில் ஆற்றில் மணல் கொள்ளையும், தூர்வாருவதிலும் ஊழல் நடக்கிறது என்பதை கண்டித்து இன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சியில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

cauvery water not get in farmers makkal adhikaram strike


திருச்சி மண்டலம் பொது பணித்துறை நீர்வள ஆதாரத் துறையில் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் பேனர் பிடித்து ஊர்வலமாக முழக்கமிட்டு வந்து ஆர்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் . வெண்ணாற்றை சீரமைக்க 800 கோடி என்னாச்சு? கல்லணை கால்வாய் சீரமைக்க 2000 கோடி என்னாச்சு? என சரமாரி கேள்விகளை எழுப்பி அந்த அலுவலகத்தையே அதிர வைத்தனர்.

cauvery water not get in farmers makkal adhikaram strike

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமை தாங்கினார். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் திருச்சி நகர தலைவர் தோழர் வின்சென்ட் மற்றும் தோழர்கள், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ம.ப. சின்னத்துரை மற்றும் அரியூர் பகுதி விவசாயிகள் திருநாவுக்கரசு மற்றும் ராஜேந்திரன் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். சுமார் அரை மணி நேரமாக ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கடைமடைக்கு தண்ணீர் செல்லாத வாய்க்கால், ஏரிகள், குளங்கள் விவசாயிகளை திரட்டி நடவடிக்கை எடுப்போம் என கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். அப்போது அவர்களை கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்றனர். 



 

Next Story

பொள்ளாச்சி கொடூரர்களின் படத்தை செருப்பால் அடித்து போராட்டம் 

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

 

பொள்ளாச்சியில் மாணவிகள் பாலியல் கொடூர வழக்கில் கைதானவர்களின் படத்தை துடைப்பம் மற்றும் செருப்பால் அடித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திய போராட்டம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

a

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி, பின்னர் அவர்களை ஆசை வார்த்தை சொல்லி தனியே வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக வீடியோ எடுத்த சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நாட்டையே உலுக்கியது.    இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

 

இந்த நிலையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நூதன போராட்டம் நடத்தினார்கள். இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார். நிர்வாகி நிர்மலா முன்னிலை வகித்தார்.

 

a

 

போராட்டத்தின்போது மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக பறை அடித்து பாட்டு பாடினார்கள். அந்த அமைப்பை சேர்ந்த பாடகர் கோவன், லதா, சத்யா, சரவணன் மற்றும் மாவட்ட செயலாளர் ஜீவா ஆகியோர் பங்கேற்று பாட்டு பாடினர். பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்தாலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்காது. எனவே, அவர்களை மக்கள் முன்னிலையில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

 

ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிளக்ஸ் பேனரில் உள்ள கைதான 4 பேரின் உருவப் படத்தின்மீது துடைப்பத்தாலும், செருப்பாலும் மாறி, மாறி அடித்து கண்டன கோஷம் எழுப்பினர். 

 

a

 

இவர்களை வெளியே திரியவிடுங்கள். மக்கள் பார்த்து கொள்வார்கள். போலீசும், இந்த அரசும் குற்றவாளிகளை காப்பாற்றவே முனைகிறது. மேலும் அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, இப்பிரச்சினையில் அரசியல்வாதிகள் சம்பந்தப்படவில்லை என கூறுவதும் பொய். பாலியல் குற்றவாளிகளை தூக்கில் போடு. அதிகாரத்தை மக்களை கையில் எடுப்போம். ஆபாச இணைய தளங்களை அரசு தடை செய்ய வேண்டும் எனவும் ஆவேசமாக பேசினர்.

 

இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திராவிடமணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த ஆதிநாராயணமூர்த்தி, பெரியார் திராவிடர் கழக செயலாளர் கமலக்கண்ணன், மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்த பர்வீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.