/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjp-it-wing-pudukottai-issue.jpg)
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டதாக பா.ஜ.க புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தொழில்நுட்ப அணி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா வாகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் அண்ணாத்துரை திமுக மாவட்ட மாணவரணி இணை ஒருங்கிணைப்பாளர். இவர் கொடுத்த புகாரின் பேரில் பா.ஜ.க கிழக்கு மாவட்ட தொழில்நுட்ப அணி செயலாளர் அரசை. கமல் கண்ணனை நாகுடி போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணாத்துரை கொடுத்த புகாரில், ‘நான் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினம் சந்தனக்கூடு விழா பார்க்க வந்திருந்த போது, முகநூல் பார்த்த போது, அதில் கமல்கண்ணன் தனது பதிவில் முதலமைச்சர் மீது அவதூறு கருத்து பதிவிட்டிருந்ததை பார்த்து, அவரைத் தேடி சென்ற போது, நாகுடி - கூகனூர் சாலையில் வைத்து கேட்ட போது என்னைத்தாக்கினார்’ என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் பேரில் அரசர்குளம் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த பாஜக ஐடி விங்க் பிரமுகரான அரசை. கமல் கண்ணனை நாகுடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.இது குறித்து பா.ஜ.க வினர் தொடர்ந்து வெளியிட்டு வரும் கண்டனப் பதிவுகளில்.. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் சுவர் விளம்பரம் மயானச் சுற்றுச்சுவர்களில் எழுதப்பட்டுள்ளதைதனது முகநூலில் பதிவிட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்வதைவிட மயான சுற்றுச்சுவரில் உதயநிதி வரவேற்பு விளம்பரம் எழுதிய திமுக பிரமுகர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று பல்வேறு பதிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கமல் கண்ணன் கைதைக் கண்டித்து பாஜகவினர்சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் தயாராகி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)