Vadaloor

வடலூர் அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ளராசா குப்பம் ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்குச் சொந்தமான வயலை மருவாய் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் குத்தகைக்கு எடுத்து அதில் கரும்பு சாகுபடிக்கான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது,வயல் மத்தியில் ஒரு மனித மண்டை ஓடும் எலும்புகளும் கிடந்துள்ளன.

இதைப் பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வடலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கரும்பு வயலில் கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளைப் பார்வையிட்டபோது எலும்புக்கூடு அருகே முதியவர் பயன்படுத்தும் ஊன்றுகோல் ஒன்றும் செருப்பு, கைலி ஆகியவையும் கிடந்தன. அவற்றைக் கைப்பற்றி, பின்னர் அந்த எலும்புகளையும் மண்டை ஓட்டையும் ஆய்வு செய்வதற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து காவலர்கள் அப்பகுதி மக்களிடம் விசாரணை செய்தனர். அதில் அரங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வேல்முருகனின் தந்தை வைத்தியலிங்கம் (80) அடிக்கடி வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி விடுவார். உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று சில நாட்கள் தங்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வருவதுமாக இருந்துள்ளார். அவ்வாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைத்திலிங்கம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. குடும்பத்தினரும் மீண்டும் வருவார் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நீண்ட நாட்களாக அவர் திரும்பிவரவில்லை. கைப்பற்றப்பட்ட ஊன்றுகோல், கைலி ஆகியன வைத்திலிங்கம் கடைசியாகப் பயன்படுத்தியது என்று தெரியவந்துள்ளது.

Advertisment

இதனால், வீட்டைவிட்டு வெளியேறிய வைத்திலிங்கம்உடல் நலம் பாதிக்கப்பட்டு கரும்பு வயலில் இறந்து கிடந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்தும் மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறந்தது வைத்திலிங்கமா? அல்லது வேறு யாராவதா?என்பது தெரியவரும் என்கிறார்கள் போலீஸார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரும்புத் தோட்டத்தில் மனித மண்டை ஓடு எலும்புகள் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.