
தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளம் அருகே நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பணிமயம் பசுமை குடில் தோட்டத்திற்கு செல்லும் பாதையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கார் ஒன்று எரிந்த நிலையில் நிற்பதாக அந்த வழியாக சென்றவர்கள் முறப்பநாடு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காரை பார்வையிட்ட போது காரின் பின்பக்க சீட்டில் தீப்பிடித்து எரிந்த நிலையில் மனித எலும்புக்கூடு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் சம்பவ இடத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வரை சிறிது தூரம் ஓடிச் சென்றது. தார் சாலையில் வெப்பம் தகித்ததால் ஓட முடியாமல் மோப்ப நாய் மரத்தடியில் ஒதுங்கி நின்றது. எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தின் மண்டை ஓட்டையும், சில எலும்புகளையும் போலீசார் கைப்பற்றி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிகாலை நேரத்தில் கார் எரிந்து கொண்டிருந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அதிகாலை நேரத்தில் அந்த நெடுஞ்சாலையில் பயணித்த கார்கள் குறித்த விவரங்களையும், வாகைக்குளம் டோல்கேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர்.
இதில் எரிந்த நிலையில் காணப்பட்ட கார் வல்லநாடு அருகே உள்ள பொன்னன் குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஜெகதீஸ் என்பவரின் உறவினர் பிரதாப் என்பவருக்கு சொந்தமான மாருதி ஆல்ட்டோ கார் என்பது தெரிய வந்துது. இதையடுத்து இருவரையும் தேடிய போது இருவரும் காணவில்லை. அவர்களது மொபைல் நம்பரும் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. அவர்களது குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் கூலிப்படை கும்பலை சேர்ந்தவர்கள், இவர்களின் காரை பயன்படுத்தி யாரையாவது காரில் கடத்தி வந்து கொலை செய்து வல்லநாடு காட்டுப்பகுதியில் வைத்து உடலை காரின் பின் சீட்டில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு சென்றிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் ஆணா? பெண்ணா? கொலையா? தற்கொலையா? என்பது குறித்து கண்டறிய முடியாமல் போலீசார் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளனர். டி.என்.ஏ டெஸ்ட் முடிவுகள் கிடைத்த பிறகு அல்லது கார் உரிமையாளர் நிலை குறித்து உறுதியான தகவல் கிடைத்த பிறகு தான் கொலையானவர் யார் என்ற முடிவுக்கு வர முடியும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து வல்லநாடு வி.ஏ.ஓ. டேனியல் ராஜா அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிந்து எரிந்த நிலையில் கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி நீதிமன்றம் எதிரில் கடந்தாண்டு 2024 மே 20ஆம் தேதி ரவுடி தீபக் ராஜா கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட முதலாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டு ஆங்காங்கே செக்போஸ்ட்கள் அமைத்து போலீசார் வாகனங்களை எல்லாம் சோதனை செய்து வரும் சூழலில், வல்லநாடு காட்டுப்பகுதியில் இந்த கொலை சம்பவம் அரங்கேறி இருப்பது போலீஸ் வட்டாரத்தை திகைக்க வைத்துள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி