Advertisment

புதுவையில் சட்டவிரோதமாக மாணவர்களைச் சேர்த்த ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம்!

 Six medical colleges in  puducherry billegally fined Rs 5 lakh each

கலந்தாய்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை, சட்டவிரோதமாகச் சேர்த்த புதுச்சேரியைச் சேர்ந்த ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில், 2017-18ஆம் கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

Advertisment

கலந்தாய்வில் கலந்து கொள்ளாமல், சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களை நீக்கம் செய்து, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவக் கவுன்சில் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதியளித்தது. அதன்படி, தற்போது அந்த மாணவர்கள் படிப்பை முடித்து விட்டனர்.

இதற்கிடையில், புதுச்சேரியில் உள்ள ஏழு மருத்துவக் கல்லூரிகளும், கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்களும், தங்களுக்கு சேர்க்கை வழங்கக் கோரி வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மாணவர்களை நீக்கம் செய்து மருத்துவக் கவுன்சில் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தார். மேலும், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி, மாணவர்களைச் சேர்த்த அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி, வினாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீமகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் ஆகிய ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கும், தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், புதுச்சேரி அரசின் கரோனா நிவாரண நிதிக்கும், சென்னையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கும், நான்கு வாரங்களில் வழங்க உத்தரவிட்டு, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தார்.

Ad

கல்வி சம்பந்தப்பட்ட வழக்குகளில், குறிப்பிட்ட கல்வியாண்டுக்குள்ளேயே தீர்வு காண வேண்டும்.குறிப்பாக, மருத்துவக் கல்வி சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சட்டவிரோத மாணவர் சேர்க்கைக்கு கருணை காட்டினால், அது தவறான முன்னுதாரணமாகி விடும் என நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

highcourt Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe