SIVASANKAR BABA DELHI HIGH COURT ORDER

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின் கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று சி.பி.சி.ஐ.டி -க்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சான்றுகளையும் புகைப்படங்களையும் அவரது தரப்பினர் சமர்ப்பித்திருந்தனர். இதையடுத்து, டேராடூனில் உள்ள சிவசங்கர் பாபாவை நேரடியாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி குழு விரைந்தது. மேலும், சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே டேராடூனில் இருந்து சிவசங்கர் பாபா தப்பித்துச் சென்றார்.

Advertisment

அதைத் தொடர்ந்து, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில காவல்துறைக்கு தமிழக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு காவல்துறையினர் முக்கிய இடங்களில் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.அப்போது, டெல்லி காசியாபாத்தில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர், அவரை தமிழக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அவரை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தமிழக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, சிவசங்கர் பாபாவை தமிழக அழைத்துச் செல்ல உயர்நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபாவை தமிழக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தமிழகம் அழைத்து வருகின்றனர்.