Skip to main content

இயக்குநர் ஷங்கர் வெளியிட்ட  ’சிவப்பு மஞ்சள் பச்சை’

Published on 17/04/2019 | Edited on 17/04/2019


பிச்சைக்காரன் படத்தை அடுத்து இயக்குநர் சசி  இயக்கத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ்  நடிப்பில் உருவாகி வரும் படம் ’சிவப்பு மஞ்சள் பச்சை’. 

 

s

 

கடந்த ஜனவரி மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். 

 

s

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா கடத்தல்... மாமா மச்சான்...  சிவப்பு மஞ்சள் பச்சை - விமர்சனம் 

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

தாய் - மகன், அண்ணன் - தங்கை, தந்தை - மகள், தந்தை - மகன்... இவையெல்லாம் தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் பேசப்பட்ட, அடித்து துவக்கப்பட்ட உறவுகள். ஆனாலும் காதலைப் போலவே ஒவ்வொரு உறவிலும் சொல்வதற்கு இன்னும் பல விஷயங்கள், உணர்வுகள் இருக்கின்றன. சுவாரசியமாக, சரியாக சொல்லப்பட்டால் உறவுகளை பேசும் படங்கள்தான் பெரும்பாலும் பிரம்மாண்ட வெற்றிகளையும் பெறுகின்றன. தனது கடந்த படத்தில் தாய் - மகன் பாசத்தின் உச்சத்தை சொல்லி வெற்றியின் உச்சத்தை அடைந்த இயக்குனர் சசி, இப்பொழுது கையில் எடுத்திருப்பது மாமன் - மச்சான் உறவு. கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே பேசப்பட்ட உறவு. மற்ற உறவுகளைக் காட்டிலும் காமெடி, சண்டை இரண்டுமே அதிகம் நிகழக்கூடிய உறவு. எப்படி விளையாடியிருக்கிறார் இயக்குனர் சசி?

 

sidharth smp



சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து அத்தையின் ('நக்கலைட்ஸ்' தனம்)   ஆதரவுடன் தனியே வாழும் அக்கா - தம்பி, ராஜி (லிஜோ மோல் ஜோஸ்)  - மதன் (ஜி.வி.பிரகாஷ்). "நான்தான் அவளோட அப்பா, அவதான் என்னோட அம்மா" என்று தனது அக்காவின் மீது பாசத்தையும் உரிமையையும் அதிகமாகவே வைத்திருக்கும் பிடிவாதக்காரத் தம்பியாக  ஜி.வி.பிரகாஷ். முறையற்ற பைக் ரேஸ் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வமுள்ள, துடிப்பும் வெடிப்புமான லோக்கல் இளைஞராக இருக்கும் மதனை ஒரு தருணத்தில் அவர் மறக்க முடியாதபடி அவமானப்படுத்தி அவர் வாழ்க்கையில் நுழைகிறார் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் (சித்தார்த்). தான் பழிவாங்கத் துடிக்கும், வெறுக்கும் ஒருவரே தனது அக்காவுக்குக் கணவராக வந்தால்? நிறைய நகைச்சுவை, நிறைய சண்டை, நிறைய எமோஷன், கூடவே தேவையில்லாத ஒரு வில்லன், ஆகியவற்றுடன் கதை சொல்லியிருக்கிறார் 'சொல்லாமலே' சசி.

"பொம்பளைங்க நாங்க உங்க ட்ரஸ் போட்டுக்கும்போது சந்தோஷமாதானடா போட்டுக்குறோம், நீங்க மட்டும் எங்க ட்ரெஸ்ஸை போடுறதை பெரிய அவமானமா நினைக்கிறீங்க?", "நமக்கு லிஃப்ட் கொடுத்தாங்க என்பதற்காக நாம போற இடத்தையும் அவுங்களே முடிவு பண்ணலாமா?", கல்யாணம் செய்துகொள்ள சித்தார்த் சொல்லும் காரணம்... இப்படி சிம்பிள் வசனங்களில், காட்சிகளில் வாழ்க்கைப் பாடம் சொல்லும் சசியின் பலம்தான் படத்தின் மிகப்பெரிய பலம். அக்கா - தம்பி, மாமன் - மச்சான் இடையே பல காட்சிகள் மிகையாக இருந்தாலும் அதையும் ரசிக்கவைப்பது சின்னச் சின்ன ரசனையான தருணங்களும் அவற்றோடு இழைந்திருக்கும் உணர்வு கலந்த நகைச்சுவையும்தான். தினமும் சாலையில் 'சர்ர்ர்...' என்று பைக்கில் அதிவேகத்தில் சென்று வழியில் செல்பவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் பொறுப்பற்ற செயலுக்குப் பின்னணியில் நடக்கும் 'பெட்'கள், அங்கிருக்கும் பகை, வன்மம், ரூல்ஸ் அனைத்தும் நமக்குப் புதிதாக சுவாரசியமாக இருக்கின்றன. ஆனால், பைக் ரேஸ் காட்சிகள் அந்த அளவுக்கு த்ரில்லிங்காகப் படமாக்கப்படவில்லை.

 

 

sidharth lijo



இன்னொரு பக்கம் டிராஃபிக் போலீஸ் செய்யும் பணி, அதன் மகத்துவம் என அதுவும் அதிகமாகப் பயன்படுத்தப்படாத ஒரு களம். படத்தின் மையமாக இருக்கும் அக்கா - தம்பி - மாமா முக்கோண உறவு... இப்படி கதைக்குத் தேவையான அத்தனை சுவாரசியங்களும் இதற்குள்ளாகவே இயல்பாக இருக்க, திடீரென வெளியே இருந்து வரும் ஒரு 'குட்கா' வில்லன், கதையில் மட்டும் வில்லனாக இல்லை. படத்துக்கே வில்லனாக வருகிறார். பெரிய நாயகர்கள் நடிக்கும் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்ற காரணம் சொல்லி சண்டைக் காட்சி வைப்பார்கள். இந்தப் படத்திற்கு அந்த அவசியம் இருந்ததாகத் தெரியவில்லை. மிக அழகான, உணர்வுபூர்வமான குடும்பச் சித்திரமாகவே முழுமையாகி முடிந்திருக்க வேண்டிய படத்தில், டெரர் இசையுடனும், "என் கிட்ட சவால் விட்டவன் அவன் நெனச்ச மாதிரி வாழ்ந்ததுமில்ல, அவன் நெனச்ச மாதிரி செத்ததுமில்ல" என பன்ச் வசனத்துடனும் வரும் வில்லன், அந்த நீண்ட சண்டைக்காட்சிவரை அயர்ச்சியை தருகிறார். சீரியசான ஒரு காட்சி, சட்டென காமெடியாக மாற்றப்படுவது சில இடங்களில் ரசிக்கவைத்துள்ளது, சில இடங்களில் சோதிக்கிறது. அனைத்தையும் தாண்டி மனதில் நிற்கும் அழகான தருணங்களை, காட்சிகளை, பாடல்களை கொண்டிருப்பது படத்தின் வெற்றி.

சென்ட்ரல் விஜிலென்ஸ் ஆஃபிசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வேலையை விட்டுவிட்டு டிராஃபிக் போலீசாகப் பணியாற்றும் பாத்திரத்தில் சித்தார்த் உண்மையாகவே மிடுக்காக இருக்கிறார். அவர் டிராஃபிக் ஒழுங்குபடுத்தும் ஸ்டைலே தனிதான். பொறுப்பற்ற, வெறுப்பேற்றும் இளைஞனாக, அக்கா தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்று பதறும் ஈகோ மிகுந்த விடலைப் பையனாக சித்தார்த்தை மட்டுமல்லாமல் நம்மையும் வெறுப்பேற்றும் அளவுக்கு நன்றாகவே நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். படத்தில் நம் கவனத்தை ஈர்த்து ரசிக்க வைக்கும் நடிப்பு நிறைய இருப்பது படத்திற்கு பெரும் பாசிட்டிவ். 'அக்கா' லிஜோ மோல், அத்தனை அழகு, அம்சமான நடிப்பு. அத்தையாக வரும் 'நக்கலைட்ஸ்' தனம் வெகுளித் தனமாக ஈர்க்கிறார். இனி பல படங்களின் அம்மாவாக வருவார் என்று எதிர்பார்க்கிறோம். 'பிச்சைக்காரன்' அம்மாவான தீபா, ரொம்ப ஜென்டில். காஷ்மீரா ரொம்ப க்யூட்.  இப்படி, படத்தில் நடிகர்களின் பங்கு மிக சிறப்பாக இருக்கிறது.
 

 

g.v.prakash



'மயிலாஞ்சியே', 'ஆழி சூழ்ந்த', 'ராக்காச்சி ரங்கம்மா', 'உசுரே' என ஒரு படத்திலேயே இத்தனை காலர் ட்யூன்கள், ரிங் டோன்கள் கிடைப்பது, அதுவும் ஒரு அறிமுக இசையமைப்பாளரிடம் இருந்து என்பது, அனேகமாக '3' அனிருத்துக்குப் பிறகு 'சிவப்பு மஞ்சள் பச்சை' சித்துகுமாரிடம்தான் நிகழ்ந்திருக்கிறது. அந்த வகையில் ஒரு சிறந்த அறிமுகமாக என்ட்ரி கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்து. பாசக் காட்சிகளில் மென்மை, மாமா - மச்சான் காட்சிகளில் பழைய 'மாமா மாப்ளே' பாடல் ரீமிக்ஸ் என பின்னணி இசையிலும் ஸ்மார்ட். வில்லன் காட்சிகளில் கூட இவரது இசை தனியே போராடியிருக்கிறது. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும் சான் லோகேஷின் படத்தொகுப்பும் ரேஸ் காட்சிகளை த்ரில்லிங்காக்க முயற்சி செய்திருக்கின்றன. அந்தக் காட்சிகளை வெட்டிய வேகத்தை சண்டைக் காட்சிகளிலும் காட்டியிருக்கலாம் படத்தொகுப்பாளர் சான்.

ஆங்காங்கே சிவப்பு சிக்னல் விழுந்து நின்றாலும், மஞ்சள் சிக்னல் விழுந்து காத்திருந்தாலும் பெரும்பாலும் பச்சை காட்டிப் போகிறது படம். இயக்குனர் சசியிடமிருந்து இன்னொரு ரசிக்கத்தக்க படம் இது.                                                                  

 

 

Next Story

படம் நாளை ரிலீஸ் என்று இப்போது அறிவித்த படக்குழு! 

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சசி. தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை இயக்கியிருக்கிறார். புதிய இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முழு ஆல்பமும் வெளியானது. 
 

sivappu manjal pachai

 

 

இந்நிலையில் இந்த படம் ஜூலை 28ஆம் தேதியே வெளியாக இருப்பதாக முதலில் அறிவித்திருந்தது படக்குழு. பின்னர், சில காரணங்களால் செப்டமர் 6ஆம் தேதி படம் ரிலீஸாக இருப்பதாக அறிவித்தது படக்குழு. 
 

தனுஷ் நடித்து கௌதம் இயக்கத்தில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா படம் அந்த தேதியில் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வந்த பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிடாமல் விரைவில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகும் நிலையில் திடீரென சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ரிலீஸ் நாளை என்று படக்குழு அறிவித்துள்ளது. 
 

zombi


இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள தனுஷ் மற்றும் சித்தார்த் இருவரும் இதை அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.