Skip to main content

சாதித்து காட்டிய தமிழன்; வியந்துபோன வடமாநில அரசுகள்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

Sivakumar excels in sculpture

 

“எங்கப்பா விவசாயி, ஆனால் எனக்கு நிறைய கனவு இருந்துச்சு. அதுக்காக கஷ்டப்பட்டு படிச்சேன். இப்ப ஜெயிச்சுட்டேன் என, சிற்பக் கலைகளில் சொல்லியடிக்கும் தமிழர் சிவகுமார் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் இளப்பாக்கம் பகுதிக்கு அருகே உள்ளது மதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய தந்தை விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், சிற்பக் கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிவகுமார், சென்னையில் உள்ள ஓவிய கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன்பிறகு, முதுகலைப் பட்டமும் இதே கல்லூரியில் தான் பெற்றுள்ளார்.

 

இந்தக் கல்லூரியில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்ற நிலையில், சிற்பக் கலையின் மேல் அதீத காதல் கொண்ட சிவக்குமார், அதன் வழியே பயணித்துள்ளார். இந்த சிற்பக்கலையில் தான் செய்யும் ஒவ்வொரு பணிகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்துள்ளார். அதிலும், கற்களை வைத்து சிற்பங்கள் வடிவமைப்பதில் சிவக்குமார் மிகவும் திறமையானவர். ஆனால், மற்றவர்களைப்போல் இல்லாமல் நவீன முறையில் சிற்பங்களை வடிவமைக்கத் தொடங்கியுள்ளார். அதுவும் தனக்கே உரிய பாணியில் புதுப் புது வடிவங்களில் பல்வேறு சிற்பங்களை உருவாக்கியுள்ளார்.

 

Sivakumar excels in sculpture

 

சிவக்குமாரின் திறமையைப் பார்த்து வியந்து போன வடமாநில அரசுகள், அவரை வைத்து பல்வேறு சிற்பங்களை உருவாக்கியுள்ளன. குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களுக்காக, புதிய வடிவிலான கடவுள் சிற்பங்களை வடிவமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மூவேந்தர்களின் சின்னம் வடிவிலான சிற்பங்கள், சிலப்பதிகாரம் பற்றிய சிற்பங்கள், சிவனின் மூன்றாம் கண், சிவலிங்கம், தஞ்சாவூர் பெரியகோவில் பற்றிய சிற்பம் எனப் பல்வேறு சிற்பங்களை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.

 

இதையடுத்து, வெளிநாடுகளிலும் பல்வேறு முக்கிய சிற்பங்களை வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், சிற்பக் கலைகளில் தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டது மட்டுமல்லாமல், வெளிநாடுகள் வரை சென்று சாதனை படைக்கும் சிவகுமார் குறித்த தகவல், சோசியல் மீடியாவில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக, ஒற்றைக்கல்லில் சொல்லப்பட்ட சிலப்பதிகாரம் எனும் கேரள சிற்பம், அதிகளவில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்