Skip to main content

காவல் நிலையத்தைக் கலாய்த்த டிக்டாக்!  -ஆக்ஷனுக்கு எதிராக ஆக்ஷன்!

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
a

 

சிவகாசி கிழக்கு காவல் நிலையைத்தில் அடுத்தடுத்து பதிவு செய்த இரண்டு வழக்குகளும் ‘போதை’ சம்பந்தப்பட்டவை. கைது செய்யப்பட்டவர்கள் இளைஞர்களாக உள்ளனர். 

 

அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட ரூ.6.5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் சிவகாசி பாறைப்பட்டி சோதனைச்சாவடியில் சிவகாசி பாறைப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த வேனில் வந்த மூன்று இளைஞர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரமும் கைப்பற்றப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

 

a

 

தமிழகத்தில் பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனையெல்லாம் ஜுஜுபி தான்! இதைக் காட்டிலும் பெரிய விவகாரமாக இருக்கிறது, இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்ட வழக்கு.  அது என்னவென்று பார்ப்போம்!

‘வந்த இடத்துல வாயை வச்சிட்டு சும்மா இருக்காம.. தேவையில்லாம பேசி மாட்டிக்கிட்டானுவ..’ என்று சிவகாசி காக்கிகள் சிரித்தபடி சொன்ன விவகாரம் இது –

சிவகாசி துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வர்,  பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு, வாகனத்தில் செல்வதற்கு அனுமதி கேட்டு சிவகாசி கிழக்கு காவல் நிலையம் வந்தனர். காவல் நிலையங்களின் மீது அவர்களுக்கு அப்படி என்ன கோபமோ? வந்த வேலையைக் காட்டிலும்,  பெரிய காரியம் ஒன்றை அரங்கேற்றினர். 

 

s

 

சிறுத்தை என்ற திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிகர் கார்த்தி, கொடூர வில்லன் ஒருவனுடைய வீட்டு வாசல்படியில் கால் வைக்க முற்படும்போது,  “ராக்கெட்.. வாஸ்து பார்த்து வலது கால் எடுத்து வச்சு போறதுக்கு இது என்ன மாமியார் வீடா? எச்சக்கல.. கேப்மாரி.. மொள்ளமாரி.. முடிச்சவிக்கி வீடு இது.. இதுக்கெல்லாம் போடு லெஃப்ட் லெக்..” என்று வசனம் பேசி, இடது காலை ஸ்ட்ராங் ஆக எடுத்து வைப்பார்.   

 

a

 

இந்த இளைஞர்களுக்கு,  காவல் நிலையத்தைப் பலரும் மாமியார் வீட்டுக்கு ஒப்பிடுவது நினைவுக்கு வந்து தொலைத்திருக்கிறது. அதனால்,  டிக்டாக் செயலியில் உள்ள சிறுத்தை வசனத்துக்கேற்ப, சிவகாசி காவல் நிலைய வாசலில்  ‘ஆக்ஷன்’ காட்டியதோடு, சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டனர். காவல் நிலையம் என்பது மொள்ளமாரி.. கேப்மாரி.. முடிச்சவிக்கிகளின் வீடா? வந்ததே கோபம் காக்கிகளுக்கு. ஈஸ்வரன், சங்கரேஸ்வரன், முருகேசன், குருமதன் ஆகிய நான்கு இளைஞர்களின் மீது,  294(b), 504, 505, ITACT4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  

 

இன்றைய இளைஞர்களின் டிக்டாக் மோகமானது,  ‘ஆட்டைக் கடிச்சு.. மாட்டைக் கடிச்சு.. கடைசில மனுஷனைக் கடிச்ச கதையா..’ காவல் நிலையத்தைக் கிண்டல் பண்ணும் அளவுக்குத் துணிச்சலைத் தந்தது கொடுமைதான்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.