விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கல். இந்த பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக சுந்தரமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று (16.07.2025) பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகு 4 நான்கு மாணவர்கள் மது போதையில் பள்ளிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டு ஆசிரியர் சுந்தரமூர்த்தி சம்பந்தப்பட்ட மாணவர்களைத் தட்டி கேட்டுள்ளார்.
அதோடு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று இது போன்ற விரும்பதாகத செயல்களில் இனிமேல் ஈடுபடக் கூடாது என ஆசிரியர் கடுமையாகக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 2 பேர் தங்கள் கைகளில் வைத்திருந்த மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களைக் கொண்டு ஆசிரியர் சுந்தரமூர்த்தியைச் சரமாரியாகத் தலையில் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் கடுமையான காயத்திற்கு உள்ளான ஆசிரியரை, அங்கிருந்த சக ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதே சமயம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் 4 மாணவர்களில் 2 மாணவர்கள் மது போதையில் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆண்டு இந்த மாணவர்கள் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் போது செய்முறைத் தேர்வின் போது ஆசிரியர் சுந்தரமூர்த்தி 4 பேருக்கும் மதிப்பெண்களைக் குறைத்ததாகவும், அதன் காரணமாக ஆசிரியரைத் தாக்க வேண்டும் என்ற முன் விரோதம் இவர்களிடம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே இன்று மது அருந்தவிட்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரைத் தாக்க வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு வந்ததாகத் தெரிய வந்துள்ளது. இதே பள்ளியில் கடந்த ஓராண்டுக்கு முன்பாக ஆசிரியர் ஒருவரை மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவமும் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளியில் ஆசிரியர் மீது மாணவர்கள் பாட்டிலால் தாக்கிய சம்பவம் சக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.