விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன. இங்குப் பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆலைகளில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் அங்குள்ள பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. இத்தகைய சூழலில் தான் சிவகாசி அருகே உள்ள ஆண்டியாபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று (21.07.2025) வழக்கம் போல் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் பல்வேறு தொழிலளர்கள் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது இந்தப் பட்டாசு ஆலையில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று மாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசு ஆலையின் 6 அறைகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் எனக் கூறப்படுகிறது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

இந்த வெடிவிபத்தால் ஏற்பட்ட அதிர்வு அங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். அதே சமயம் ஒரு ஆண் தொழிலாளர் மற்றும் 2 பெண் தொழிலாளர்கள் என 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 3 தொழிலாளர்கள் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்து வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.