/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanji thotti porattam ii copy.jpg)
அரைசாண் வயிற்றை உணவால் நிரப்பினால்தான் மனிதன் உயிர் வாழமுடியும். வறுமை, வேலையின்மை, பிழைப்பதற்கு வழியில்லாமை என ஒரு குடும்பம் பாதிப்புக்குள்ளானால், உறவினர்களோ, நண்பர்களோ உதவுவர். பல குடும்பங்களுக்கும் இதே நிலைமை என்றால், அந்தப் பகுதி மக்கள் ஒன்றுசேர்ந்து உணவு வழங்குவர். ஒரு கிராமம் பாதிக்கப்பட்டிருந்தால், ஊர்கூடி கஞ்சி காய்ச்சி ஊற்றி, அம்மக்களின் பசியைப் போக்குவர். இது, ஒருவேளை கஞ்சியாவது அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்ற நல்லெண்ணத்தின் வெளிப்பாடு ஆகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanji thotti at sivakasi copy.jpg)
1780-இல் பஞ்சம் வந்தபோது திருவிதாங்கூர் பகுதி முழுவதும் கஞ்சித் தொட்டிகளைத் திறந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியின்போது, 1876-லிருந்து 1878 வரையிலும் பெரும்பஞ்சம் சென்னை மாகாணத்தைப் பீடித்திருந்தது. இப்பஞ்சம் மைசூர், பம்பாய், ஹைதராபாத் வரைக்கும் பரவியது. வட இந்தியாவின் சில பகுதிகளும் தப்பவில்லை. அதனால், அந்த இரு ஆண்டுகளில் 1 கோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் இறந்ததாகப் பதறவைக்கிறது புள்ளிவிபரம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanji thotti porattam.jpg)
பசி, பட்டினி, பஞ்சம், கஞ்சித்தொட்டி என அந்தக்கால அவலத்தை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? வேலை காலி இல்லை என்ற போர்டை தமிழகத்தில் அத்தனை ஊர்களிலும் தொழிற்சாலைகளும், அலுவலகங்களும் தொங்கவிட்டுக் கொண்டிருந்த காலத்தில், வேலைக்கு ஆட்கள் தேவை என்று போர்டு வைத்துத் தொழிலாளர்களை வரவேற்ற ஒரே ஊர், கடும் உழைப்பால் குட்டி ஜப்பான் என்று பெயரெடுத்த சிவகாசி. இன்றோ, அந்த சிவகாசிக்கே பெரும் சோதனை. பல இடங்களிலும் கஞ்சித்தொட்டி திறந்து, வேலையின்றித் தவிக்கும் லட்சக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களுக்கு கஞ்சி ஊற்றும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanji thotti.jpg)
பட்டாசுத் தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் எனப்படும் பச்சை உப்பை பயன்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் உட்பட பல ஊர்களிலும் இயங்கிவந்த 1070 பட்டாசு ஆலைகள், கடந்த நவம்பர் 12-ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டன. அதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். பெருமளவில் விருதுநகரில் திரண்டு மனு கொடுத்தும், மத்திய அரசோ, மாநில அரசோ தலையிட்டு, உடனடியாகத் தீர்வு காணவில்லை. அதனால், ஒருவேளை உணவுக்கே பட்டாசுத் தொழிலாளர்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், பட்டாசு ஆலைகளை உடனே திறக்க வலியுறுத்தியும், வேலையில்லா காலத்துக்கு பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டியும், இன்று சிவகாசியின் பல பகுதிகளிலும் கஞ்சித்தொட்டி திறந்து போராடத் துவங்கியிருக்கின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kanji.jpg)
வெடிகள் மூலம் வானத்தை அண்ணாந்து பார்க்கவைத்து உலகத்துக்கே வேடிக்கை காட்டியவர்கள் சிவகாசி மக்கள். இன்றோ, வேலை இழப்பினால் பசி, பட்டினியால் வாடி, மற்றவர்களின் பரிதாபப் பார்வைக்கு ஆளாகியிருக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)