Skip to main content

“நேர்மையைக் கொண்டுபோய் குப்பையில் போடு!” -ஊழல் புரிவதில் உறுதியுடன் நெடுஞ்சாலைத்துறை!

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

 

லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடும் குறிப்பிட்ட அரசுத்துறைகளில் நேர்மை தவறாமல் பணியாற்றிட வேண்டும் என்ற கொள்கை உறுதியோடு இருப்பவர்கள் படும்பாடு இருக்கிறதே! 

 

m

 

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சிவகிரி பிரிவு (நெல்லை மாவட்டம்) அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக இருக்கிறார் மு.மாரிமுத்து. சம்பளம் வாங்கினாலும் அரசுப் பணி என்பது மக்களுக்கு ஆற்றிடும் சேவை என்பதை மனதில் நிறுத்தியே,  தனது வேலைகளைச் செவ்வனே செய்து வருகிறார். அதனால்தான், அவருக்குச் சோதனை!

 

s

 

நெடுஞ்சாலைத்துறையில் சுமார் 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலங்கள் மற்றும் சாலைப்பணிகள் நடைபெறவுள்ளன. இப்பணிகளை 60 சதவீதம் மட்டுமே தரமானதாகச் செய்வார்கள். ஆனால், 100 சதவீத தரத்தோடு வேலை நடந்ததாக, இளநிலை பொறியாளர் மாரிமுத்து எழுதித்தந்தாக வேண்டும்.  கொள்கையை விட்டுவிடாத பொறியாளர் ஆயிற்றே! இந்த நெருக்கடியிலிருந்து எப்படி தப்பிப்பது? அசுரபலம் வாய்ந்த இத்துறையினரை, தனிஒருவனாக எதிர்கொள்வதற்கு இது ஒன்றும் சினிமா அல்லவே!  126 நாட்கள் விடுப்பில் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். சரி, விடுப்பு முடிந்து மீண்டும் பணியாற்றுவோம் என்று வந்தவரிடம்,  “உன் நேர்மையைக் கொண்டுபோய் குப்பையில போடு. உனக்குரிய பங்கை வாங்கிக்கிட்டு சொல்லுற இடத்துல கையெழுத்துப் போடறதுன்னா வேலையைப் பாரு. இல்லைன்னா.. திரும்பவும் லீவு எடுத்துட்டு ஓடிப்போயிரு.” என்று நெருக்கடி தந்திருக்கின்றனர். செய்வதறியாது மீண்டும் விடுப்பு எடுத்துச் சென்றுவிட்டார்.   

 

இளநிலை பொறியாளர் மாரிமுத்துவைத் தொடர்புகொண்டோம். “இதுகுறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை.” என்று தயங்கினார் ஜீவனற்ற குரலில்.  இத்தனைக்கும் இவர்,  நெடுஞ்சாலை ஆய்வாளர் சங்கத்தின் கவுரவ பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். அவருக்கே இந்த நிலை!

 

நல்ல அதிகாரிகள்! மிகமிக நல்ல ஆட்சியாளர்கள்! விளங்கிவிடும் தமிழ்நாடு!


 

சார்ந்த செய்திகள்