Skip to main content

மனைவி, பிள்ளைகள் மீதான பாசம்... ஆறு நாளில் ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து வந்த சுப்பையா... 

Published on 26/04/2020 | Edited on 26/04/2020

 

சிவகங்கை மாவட்டம், காளையர் கோவில் அடுத்த சருகனி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. 48 வயதாகும் இவர், டைல்ஸ் ஒட்டும் பணியைச் செய்து வருகிறார். மனைவி மற்றும் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். முதலில் சிவகங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள ஊர்களில் வேலை செய்து வந்த சுப்பையா பின்னர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் சென்று அங்கேயே தங்கியிருந்து டைல்ஸ் ஒட்டும் பணிகளை மேற்கொண்டார். தற்போது அவர் ஹைதராபாத்தில் டைல்ஸ் ஒட்டும் பணியைச் செய்து வந்தார்.

 

 

sivagangaiஇந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை முதலில் சாதாரணமாக எடுத்துகொண்டார் சுப்பையா. விரைவில் ஊரடங்கு முடிந்துவிடும் என நினைத்தார். ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதும் அது குறித்து கவலை அடைந்தார். மனைவி, மகன்கள், மகளைப் பார்க்க வேண்டும் என்று நினைத்த சுப்பையா, ஹைதராபாத்தில் இருந்து சிவகங்கை வரை ஆயிரம் கிலோ மீட்டர் நடக்க முடியுமா? வழியில் உணவு கிடைக்குமா? தண்ணீர் கிடைக்குமா? எங்கு உறங்குவது? எங்கு ஓய்வு எடுப்பது? என பலவிதமாக யோசித்தார். 
 

மனைவி, மகன்கள், மகள் மீதான பாசத்தில் தூரம், உணவு என எதைப்பற்றியும் கவலைப்படாமல் கடந்த 19- ஆம் தேதி நடக்க ஆரம்பித்தார். கர்னூர், குப்பம், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை வழியாக இரவு பகல் பாராமல் நடந்து வந்திருக்கிறார். வழியில் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. வழியில் கொடுக்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் நடந்துள்ளார். சிவகங்கை எல்லையில் உள்ள சோதனைச் சாவடியை 6- ஆவது நாளில் அடைந்துள்ளார். 
 

http://onelink.to/nknapp

 

sivagangai

 

அந்தச் சோதனைச் சாவடியில் சுப்பையாவை காவல்துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து நடந்து வந்ததாக சுப்பையா சொன்னவுடன், காவல்துறை ஆய்வாளர் மோகன் அவரை, 'முதலில் உட்காருங்க' எனச் சொல்லி அவருக்கு உணவு ஏற்பாடு செய்திருக்கிறார். மேலும் முகக் கவசம், ஆயிரம் ரூபாய் பணம், அரிசியைக் கொடுத்ததுடன், சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ள செய்தார். பின்னர் சுப்பையாவை அவரது கிராமத்திற்கு அனுப்பி வைத்தார் காவல் ஆய்வாளர்.

மனைவி, பிள்ளைகள் மீதான பாசம் சுப்பையாவை ஆறு நாளில் ஆயிரம் கிலோ மீட்டர் நடக்க வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

கீழடி அகழாய்வில் பானைகள் கண்டெடுப்பு!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Discovery of pots in underground excavation

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடியில் ஒன்பது கட்ட அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வாராய்ச்சி பணிகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் 18 ஆம் தேதி (18.06.2024) காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதனையடுத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக 14 இடங்களில் குழிகள் வெட்டப்பட்டு ஒன்றை ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே மீன் சின்னம் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக்களுடன் கூடிய பானைகள் கிடைத்துள்ளது. இரண்டு பானைகள் ஒரே இடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. பழங்கால தமிழர்கள் மிக நேர்த்தியாகப் பானையாக வடிவமைத்துள்ளனர்.

கீழடியில் இரண்டு பழங்கால பானைகள் கண்டறியப்பட்டுள்ள செய்தி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 6 அடி ஆழத்தில் இருந்து இரண்டு பானைகள் கிடைத்துள்ளன. மேலும் பானைகள் இருந்த இடத்தில் மூங்கில் கம்புகள் ஊன்றி கூரைகள் வேயப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூங்கில் கூரைகளைக் கரையான் அரைக்காமல் இருக்க ஆற்றல் மணல் போடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Next Story

நன்றி சொல்ல வந்த கார்த்தி சிதம்பரம்; ஒதுங்கி நின்ற ப.சிதம்பரம்!

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
P. Chidambaram stood aside when Karthi Chidambaram thanked people

சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்றம் செல்வதற்கு முன்பே வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியாகச் சென்று அந்தந்தந்தப் பகுதி திமுக கூட்டணிக் கட்சி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.

அதே போல, வெள்ளிக் கிழமை(14.6.2024) ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதனுடன் கிராமம் கிராமமாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பேசிய அவர், “தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய நல்லாட்சிதான் காரணம். அதே போல என்னைத் தொடர்ந்து வேட்பாளராக அறிவித்த கட்சித் தலைமை, வெற்றி பெறச் செய்த வாக்காளர்கள், களப்பணியாற்றிய அமைச்சர் மெய்யநாதன், கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றிகள். மேலும் உங்களுக்கு தேவையான என்ன காரியமாக இருந்தாலும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ப.சிதம்பரம் வரவில்லையா...? என்று கேட்க, அதோ.. அங்கே நிற்கிறார் என்று கார்த்தி சிதம்பரம் கையைக் காட்டிய திசையில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். மகன் கார்த்தி சிதம்பரம் பிரச்சார வாகனமேறி நன்றி கூறிக் கொண்டிருக்கும் போது ப.சிதம்பரம் மக்களோடு மக்களாக சாலையில் நின்று பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார். சில இடங்களில் காரில் இருந்தே இறங்கவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன் மகனுக்காக மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். ஆனால் இன்று நன்றி சொல்ல வந்துவிட்டு நன்றி அறிவிப்பு பிரச்சார வாகனத்தில் ஏறாமல் ஒதுங்கி நிற்பது ஏன் என்ற கேள்ளி தொகுதி மக்களிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் எழுந்துள்ளது.