Sivagangai

Advertisment

சிவகங்கை அருகே லடாக்கில் பணியாற்றி வரும் ராணுவ வீரரின் மனைவி மற்றும் அவரது தாயாரை அதிகாலை கொலை செய்யப்பட்டு வீட்டில் உள்ள நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சிவகங்கை மாவட்டம் முடுக்கூரணியில் லடாக்கில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஸ்டீபனின் குடும்பம் வசித்து வருகிறது. ஸ்டீபனின் தாயார், தந்தை மற்றும் எட்டு மாத கைக் குழந்தையுடன் மனைவி ஆகியோர் வசித்து வருகின்றனர். ஸ்டீபனின் தந்தையும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இன்று அதிகாலை ஸ்டீபனின் தந்தை தோட்டத்திற்கு விவசாய வேலைக்குச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், ஸ்டீபனின் தாயார் மற்றும் மனைவியைத் தலையணை வைத்து அமுக்கியும், இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. வீட்டினுள் இருந்த பீரோவில் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

எட்டு மாத கைக்குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது இரட்டைக் கொலை நடந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. காளையார் கோவில் காவல்நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இரட்டைக் கொலை நடந்த சம்பவம் குறித்து அறிந்த ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.வருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்துஆய்வு செய்தார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது.