அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!

Sivagangai dt Chakkottai near Poiyavyal GHSS student Sakthi Somaiah incident

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே உள்ள பொய்யாவயல் அரசு உயர் நிலைப்பள்ளியில் சக்தி சோமையா (வயது 14) என்ற மாணவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியின் கம்யூட்டர் பாடப்பிரிவின் போது, கணினி ஆய்வகத்தில் கணினிக்கு இணைப்பு கொடுக்க பள்ளியின் உதவியாளர் மாணவர் சக்தி சோமையாவிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி கணினிக்கு இணைப்பு கொடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மாணவன் சக்தி சோமையாவை மின்சாரம் தாக்கி உள்ளது.

இதனையடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனைக் காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மாணவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவே மாணவனின் மரணத்திற்குக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக சாக்கோட்டை போலீசார் மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் ராஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பள்ளியில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

sivakangai
இதையும் படியுங்கள்
Subscribe