Skip to main content

கரோனா இல்லாத சிவகங்கை... சாதித்த மாவட்ட ஆட்சியர்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

sivagangai district coronavirus recovered over district collector

 

ஈரோடு, தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டங்களின் வரிசையில் கரோனா இல்லாத மாவட்டமாக சாதனை படைத்தது சிவகங்கை. கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த மொத்தமுள்ள 12 நபர்களில் இறுதியாக இருந்த ஒருவரும் இன்று (02/05/2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது சிவகங்கை. இத்தகைய சாதனைக்குச் சொந்தக்காரர் இம்மாவட்டத்தின் ஆட்சியாளர் ஜெயகாந்தனே எனச் சிலாகிக்கின்றனர் பொதுமக்கள்.

ஆளும் அரசுகளின் கரோனா வைரஸ் தொற்று அறிவிப்பு வெளியான நாள் முதலே மாவட்டம் முழுமைக்கும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு கிருமி நாசினிகளைத் தெளிப்பது, கபசுர குடி நீரை மக்களுக்கு அளிப்பது எனப் பனிகளை முடுக்கிவிட்ட மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், பணிகள் முறையாக நடைபெறுகின்றதா..? எனப் பணி நடைபெறும் இடத்திற்கே சென்று பார்வையிட தொய்வில்லாமல் சுகாதாரப்பணிகள் நடந்தேறியது. அதே வேளையில் கரோனா தொற்று பாதித்துள்ளதா.? மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு மருத்துவப் பரிசோதனைகளையும் தொடர்ச்சியாக நடத்த, மாவட்டத்திலேயே முதன்முதலாக 30.03.2020 அன்று திருப்பத்தூர் நகர்ப்பகுதியில் 3 நபர்களுக்கும், இளையான்குடி நகர்ப்பகுதியில் 1 நபருக்கும், தேவகோட்டை நகர்ப்பகுதியில் 1 நபருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
 

sivagangai district coronavirus recovered over district collector


அதனைத் தொடர்ந்து 09.04.2020 அன்று திருப்பத்தூர் நகர்ப்பகுதியில் 14 வயது ஒரு பெண்ணிற்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட அவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 30.03.2020 அன்று முதல் சிகிச்சை பெற்று வந்த 5 நபர்களில் 4 நபர்கள் பூரண குணமடைந்ததையொட்டி, 15.04.2020 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட,. மீதமுள்ள 1 நபர் 21.04.2020 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து 09.04.2020 அன்று சிகிச்சை பெற்று வந்த 14 வயது பெண் 22.04.2020 அன்று பூரண குணமடைந்தையொட்டி அவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 

இதே வேளையில், காரைக்குடி நகர்ப்பகுதியின் நடந்த மருத்துவப் பரிசோதனையில் 4 வயது பெண் குழந்தைக்கும், திருப்பத்தூர் நகர்ப்பகுதியில் நடந்த மருத்துவப் பரிசோதனையில் 4 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையொட்டி, மொத்தமுள்ள 5 நபர்களும் 13.04.2020 அன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து  19.04.2020 அன்று திருப்பத்தூர் நகர்ப்பகுதியில் 1 நபருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட அவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. 
 

sivagangai district coronavirus recovered over district collector


தொடர் சிகிச்சையின் விளைவாக 13.04.2020 அன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 5 நபர்களும் பூரண குணமடைந்ததையொட்டி 27.04.2020 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இறுதியாக 19.04.2020 அன்று சிகிச்சைக்கு வந்த நபர் பூரண குணமடைந்ததையொட்டி இன்று (02/05/2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட கரோனா இல்லாத மாவட்டமாக மாறியது சிவகங்கை. இதற்காக மருத்துவச் சேவையில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து இனிப்புகளை வழங்கியதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நன்றியினை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

sivagangai district coronavirus recovered over district collector


 

http://onelink.to/nknapp


"கரோனா இல்லாத மாவட்டங்களில் இதுவும் ஒன்று என்ற இலக்கை அடைவதற்கு முழுக்காரணம் ஆட்சியர் ஜெயகாந்தனே! மாவட்டம் கபசுர குடிநீரை வழங்க ஏற்பாடு செய்தவர், சித்த மருத்துவர் சொக்கலிங்கம் பிள்ளை ஓலைச்சுவடிகள் மூலம் ஆய்வு செய்து தயாரித்த வாத பித்த கப விஷ சுர கசாயத்தினை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தங்கி சிகிச்சை எடுத்த கரோனா தொற்று நோயாளிகளுக்கும் தருவித்ததும் குறிப்பிடத்தக்க ஒன்று. அதே வேளையில், மாவட்டத்திலுள்ள நலிவடைந்த மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தாலுகாவிலுள்ள வருவாய்த்துறையினர் மூலம் அரிசி உள்ளிட்ட மளிகை, காய்கறிகளையும் வழங்கியதும், தன்னார்வலர்களைக் கொண்டு சாலையோரம் வசிக்கும் மனிதர்களுக்கு உதவும் நோக்கில் சாப்பாடு வழங்கி வந்ததும் இவருடைய அரும்பணிகளில் ஒன்று. இவர் இல்லையேல் எதுவும் சாத்தியமில்லை." என்கிறார் காரைக்குடி ஊற்றுகளின் அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான ஜான்பால்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!