The situation is under control Minister Thangam South on opening of dams

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் தற்போது கனமழை பொழிந்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (18.12.2023) காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதே சமயம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாகத் தென் மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது குறித்துப் பேசுகையில், “நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது.

Advertisment

தாமிரபரணி ஆற்றிலிருந்து தற்போது 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக தாமிரபரணி ஆற்றில் 65 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றம் செய்ய வாய்ப்புள்ளது. தாமிரபரணி ஆற்றிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் பட்சத்தில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். இருப்பினும் தற்போது வரை நிலைமை கட்டுக்குள் உள்ளது. இது தொடர்பாகத்தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மழை வெள்ள மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மழை வெள்ள சேதங்களைத்தவிர்க்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.