ADVERTISEMENT

எம்.பி.க்களுக்கே இந்த நிலைமை என்றால்...? ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி 

12:42 PM Nov 01, 2019 | rajavel

ADVERTISEMENT

ஆறு மாதங்களாகியும் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டெல்லியில் வீடுகள் தயாராகவில்லை. நவீன இந்தியாவில் மத்திய அரசின் வேகமா இது. இந்தியாவினுடைய சட்டத்தை இயற்றும் வல்லமை படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதனுடைய தேவைகள் எப்படி பூர்த்தி செய்யப்படும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை வீடுகள் தயாராகவில்லை. 2014 -லிலும் இதே நிலைமைதான் ஏற்பட்டு பல கோடி ரூபாய்களை ஓட்டல்களுக்கு அரசாங்கம் தாரைவார்த்தது. இன்றைக்கு இருக்கின்ற அதிநவீன வசதிகளை கொண்டு ஒவ்வொரு காரியமும் சாதிக்கின்ற நேரம் குறைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதிகபட்ச வேகமாக மத்திய அரசு இயங்குகிறது என்று இந்திய மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள்.


ஒரு தொழிற்சாலைக்கு அனுமதி என்றாலும், ஒரு கொள்கை முடிவு என்றாலும் மத்திய அரசு மிக வேகமாக இயங்குகிறது என்று ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகளை பார்க்க முடிகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட அனைத்து அமைச்சர்களுமே பொதுமக்களுடைய குறைகளை உடனே தீர்ப்பதற்கு ஆசைப்படுவது போல் தான் நம்பிக்கை கொடுக்கிறார்கள்.


ஆனால் செயல்படுத்துவதில் மிகப்பெரிய சுணக்கம் இருக்கின்றது. இந்தியாவின் பொருளாதார மந்தநிலைக்கும் இதுதான் காரணம். முடிவுகள் வேகமாக எடுக்கப்படுவது போல தென்பட்டாலும் சம்பந்தப்பட்ட துறைகளுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது.


புதிதாக GST வரி கொண்டு வந்ததை விட செயல்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கம் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் செயல்பாட்டு தோல்விதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.


டெல்லியில் மத்திய அரசு வேகமாக செயல்பட்டிருந்தால் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் இவ்வளவு தாமதமாக வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இந்தியாவினுடைய சட்டத்தை இயற்றும் வல்லமை படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதனுடைய தேவைகள் எப்படி பூர்த்தி செய்யப்படும்.


இந்தியாவினுடைய தொழில்துறை இன்றைக்கு சந்தித்து கொண்டிருக்கின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படாதது தான் காரணம். இது அனைத்து நிலைகளிலும் தேசம் சந்திக்கின்ற பிரச்சினை. நவம்பர் 18-ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாவது இல்லங்களை ஒதுக்குவதற்கு சம்பந்தப்பட்ட அரசுத்துறை தயாராக வேண்டும்.


இதை ஒரு உதாரணமாக தான் சொல்ல விரும்புகிறோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். மத்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும். பொருளாதார சரிவினுடைய தாக்கம் கொஞ்சம்கொஞ்சமாக மேலிருந்து கீழ்நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அடிமட்ட மக்கள் பாதிக்கப்படும் போது புரட்சி வெடிக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT