Skip to main content

வரலாற்று சிறப்பு மிக்க மலையில் பயங்கர காட்டு தீ!  

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

Sithannavasal mount fire accident

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று சித்தன்னவாசல். சிறப்பு மிக்க குடைவரை ஓவியம், சமணர் படுக்கைகள் ஆகியவை இங்கு உள்ளன. இதனைக் காண தமிழகம் மட்டுமின்றி பல வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வரலாற்று ஆய்வாளர்கள் வந்து செல்கின்றனர்.

 

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு படகு சவாரி, சிறுவர் பூங்கா என பொழுதுபோக்குக்கான சாதனங்களும் அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் கட்டணங்களும் வசூலிக்கப்பட்டது. மேலும், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

 

நேற்று மாலை சித்தன்னவாசல் நுழைவாயில் அருகே யாரோ மர்ம நபர்களால் வீசப்பட்ட சிறு தீ சமணர் படுக்கை உள்ள மலை அடிவாரம் வரை வேகமாக பரவியது. அப்பகுதி பொதுமக்கள் போலீசார் உதவியுடன் சிப்காட், இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேரம் பற்றி எரிந்த தீயால் செடி, கொடி, மரங்களும் எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரு லட்சம் மாணவர்களுடன் புத்தகம் வாசித்து மாணவர்களை ஊக்கப்படுத்திய மாவட்ட ஆட்சியர்!

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 collector mercy Ramya who encouraged the students by reading book with one lakh students

 

“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்பார் ஆபிரகாம் லிங்கன். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் ஆறாவது புத்தக திருவிழா நிகழ்வு வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை 80 அரங்குகளில் பல லட்சம் புத்தங்களோடு நடைபெற இருக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், இலக்கிய ஆளுமைகள், அரசு உயரதிகாரிகள், படைப்பாளிகளின் சொற்பொழிவுகள், சாதனையாளர்களுக்கு விருதுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. 

 

இதற்கு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களான நூறு நாள் வேலைத்திட்டப் பகுதிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் நேற்று ஒரு மணி நேரம் வாசிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நிகழ்வில் ஒரு லட்சம் மாணவ மாணவியர்களோடு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா பங்கேற்று புத்தகம் வாசித்தார்.   

 

 collector mercy Ramya who encouraged the students by reading book with one lakh students

 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், “வாசிப்புப் பழக்கம் மாணவர்களின் மூளைக்கு ஒரு சிறந்த பயிற்சி. நினைவாற்றலை மேலும் வளர்க்கும், படைப்பாற்றல் மற்றும் சிந்தனைத்திறன் மேம்படக்கூடும். உலகில் பெரிய மாமேதைகள் அனைவரும் புத்தக வாசிப்பினாலும் உருவானவர்களே. இன்றைய விஞ்ஞான உலகில் மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பு என்பது மிகவும் குறைந்துவிட்டது. ஆகையால் இன்றைய குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அதன் நன்மைகளையும் எடுத்துரைத்து புத்தகம் வாசிக்கத் தூண்ட வேண்டும். அதிலும் மிக முக்கியமாக மாணவிகள் வாசிக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேற்று ஒரு மணி நேரம் புத்தகங்களை வாசித்தனர்.

 

 

 

Next Story

மின்னல் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி அமைச்சர் ஆறுதல்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

Minister comforts the family of the girl who passed away due to lightning

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி ஒத்தாங்கொல்லை பகுதியை சேர்ந்த கோபு சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வித்யா (31), மகள் பவ்யாஸ்ரீ (2). இருவரையும் ஊரில் விட்டுவிட்டு சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

 

கடந்த வாரம் வித்யா உறவினர் வீட்டு விசேசத்திற்கு சென்று மாலை வீடு திரும்பியவர் மழை வரும் போல் இருந்ததால் வீட்டு வாசலில் கொட்டிக்கிடந்த காய்ந்த இலைகளை கூட்டிக் கொண்டிருந்த போது திடீரென அருகில் நின்ற புளிய மரத்தில் தாக்கிய மி்ன்னல் வித்யாவையும் தாக்கி உடலையும் அவர் அணிந்திருந்த நகைகளையும் கருக்கியது. அக்கம்பக்கத்தினர் வித்யாவை மருததுவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடியும் பயனில்லை. மின்னல் தாக்கிய வேகத்திலேயே உயிர் போய்விட்டிருந்தது. இதனால் ஊரே சோகத்தில் மூழ்கிய நிலையில் சிங்கப்பூரில் இருந்த கணவர் கோபுவும் சொந்த ஊருக்கு திரும்பினார்.

 

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வளர்மதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தமிழ்நாடு அரசு பேரிடர் நிவாரண நிதி ரூ. 4 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். 2 வயது கைக்குழந்தையோடு கண்ணீர் மல்க நிவாரணக் காசோலையைப் பெற்றுக்கொண்ட கோபு பேச முடியாமல் குமுறியது அனைவரையும் கரைய வைத்தது.