
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முந்திரி விவசாயம் செய்து வரும் ராமநாதன். இவரது மனைவி இளவரசி கடலூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள் உள்ளனர். அதில் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய குடிமைப்பணி தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து ஐஏஎஸ் ஆக தேர்ச்சி பெற்று தற்போது பொன்னேரியில் துணை ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார்.
இதனிடையே இவரது மூத்த சகோதரி சுஷ்மிதா(26) தங்கையைப் போல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற படித்து வந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த சிவில் சரிவீஸ் தேர்வில் இந்திய அளவில் 528வது இடத்தைப் பிடித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தங்கைகளான சகோதரிகள் இருவரும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது இந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். சகோதரிகள் இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒன்றாகவே சிவில் சர்வீஸ் எழுதி வந்துள்ளனர். இதில் தங்கை முதலில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ் ஆகிவிட்டார். தற்போது மூத்த சகோதரி கடுமையாக முயற்சி செய்து ஆறாவது முறையாக தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி அடைந்துள்ளார்.
“கல்வியில் விடா முயற்சி; கடின உழைப்பு; சாதிக்க வேண்டும் என்ற வெறித்தனமான எண்ணம்; படிப்பில் மிக கவனம்; தன்னம்பிக்கை ஆகியவற்றை கடைப்பிடித்தால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று விட முடியும். அதே நேரத்தில் குடும்பத்தினர் ஒத்துழைப்பும் மிக முக்கியம். அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைய வேண்டுமானால் கல்வித்துறையில் சாதிக்க வேண்டும். அதில் வெற்றி பெறுகிறவர்கள் எந்தத் துறையில் பணிக்குச் சென்றாலும் அந்தத் துறையை வளர்ச்சிக்கு கொண்டு வர முடியும்” என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார் சுஷ்மிதா. மேலும், தனக்கு அரசு அளிக்கும் பணியை மக்களுக்கான முழு நேரப் பணியாக, சேவை மனப்பான்மையோடு செய்து முடிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.