
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மேல்பாப்பனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கொள்ளு என்பவரின் மகன் செந்தில்முருகன் (35). பழைய நெய்வேலியைச் சேர்ந்த நல்லதம்பி மகள் செந்தமிழ்தேவி. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2015-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் இந்தக் காதலுக்கு செந்தமிழ்தேவியின் வீட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இருப்பினும் சில வருடத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கோபித்துக் கொண்டு செந்தமிழ்தேவி அடிக்கடி தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
கடந்த 12.09.2017 அன்றும் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்ற செந்தமிழ்தேவியை அழைப்பதற்காக செந்தில்முருகன் சென்றுள்ளார். அப்போது செந்தமிழ்தேவி மற்றும் அவரது தாய் ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்சனையால் செந்தில்முருகன் அவரது வீட்டிற்குத் திரும்ப வந்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து செந்தமிழ் தேவியின் அண்ணன் ராமச்சந்திரனிடம் இப்பிரச்சனை குறித்து செந்தமிழ்தேவி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன்(41), கையில் அரிவாளுடன் செந்தில்முருகனின் வீட்டிற்குச் சென்று அவரை வெட்ட முயற்சித்துள்ளார்.
அப்போது செந்தில் முருகனின் சகோதரியின் மகன்களான சண்முகசுந்தரம் மற்றும் சிவபாலன் ஆகியோர் வந்து தடுத்துள்ளனர். அதில் மூன்று பேரையும் செந்தில்முருகன் அரிவாளால் வெட்டியதில் சிவபாலன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற இருவரும் வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் மாவட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராகி வாதாடி வந்தார்.
இந்தநிலையில், வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் ராமச்சந்திரன் மீதான வழக்கு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமச்சந்திரனை போலீசார் அழைத்துச் சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)