ADVERTISEMENT

சிறுவாணி குடிநீர் திட்டப் பணி: கேரளா முதல்வருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம்

03:11 PM Feb 01, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோயம்புத்தூர் மாநகராட்சி, சிறுவாணி குடிநீர் திட்டப் பயனாளிகளுக்குத் தடையின்றி குடிநீர் வழங்கிட, சிறுவாணி அணையில் நீர் சேமிப்பைப் பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அந்தக் கடித்தத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது; “கோயம்புத்தூர் நகருக்கு தண்ணீர் வழங்கவேண்டிய முக்கிய ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. தற்போது கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான மொத்த நீர் தேவையான 265 மில்லியன் லிட்டரில், 101.4 மில்லியன் லிட்டர், சிறுவாணி அணையை ஆதாரமாகக் கொண்டு இருக்கிறது. சிறுவாணி அணையிலிருந்து ஆண்டுதோறும் 1.30 டி.எம்.சி.க்கு மிகாமல் (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) குடிநீர் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் கடந்த ஆறு ஆண்டுகளில் கேரள அரசு 0.484 டி.எம்.சி.-யிலிருந்து 1.128 டி.எம்.சி அளவிற்குத்தான் தண்ணீரை வழங்கியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான அளவிற்கு மழை பெய்துள்ளபோதிலும், கேரள நீர்ப்பாசனத் துறை முழு நீர்த்தேக்க மட்டத்திற்குப் பதிலாக இருப்பு நிலையைக் குறைத்து பராமரிக்கிறது என்பது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் குறைவதால், இத்திட்டப் பயனாளிகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்ட அளவைவிட குறைந்த அளவில்தான் தண்ணீரை வழங்க முடிகிறது.

சிறுவாணி அணையில் முழு நீர்த்தேக்கம் வரை நீரைச் சேமித்து வைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் வழக்கமான கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கேரள அரசின் நீர்வள ஆதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரையும் அணுகியிருக்கிறோம். பலமுறை தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், கேரள நீர்ப்பாசனத் துறை, 878.50 மீட்டர் அளவிற்கு, அதாவது முழு நீர்த்தேக்கமட்டம் வரை சிறுவாணி அணையின் நீர் இருப்பின் மட்டத்தைப் பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முழுக் கொள்ளளவிற்கு நீரைச் சேமித்து வைக்காவிட்டால், சிறுவாணி நீரை நம்பியுள்ள கோவை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் அடுத்த கோடைகாலத்தில் கடுமையாகப் பாதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT