Skip to main content

பண்ணாரி கோவில் அருகே நடமாடிய ஒற்றை யானை; பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் 

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

A single elephant walked near the Pannari temple; Devotees run screaming

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபடுவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான வனவிலங்குகள் உலா வருகின்றன. 

 

குறிப்பாக யானைகள் அதிகளவில் பண்ணாரி வனப்பகுதியில் உலா வருகின்றன. வனப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியே வரும் யானைகள் திண்டுக்கல் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி சோதனை சாவடி அருகே இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம். இந்தப் பகுதியில் நூற்றுக் கணக்கான லாரிகளில் கரும்புகள் ஏற்றி செல்லப்படுவதால் கரும்புக் கட்டுகளை சாப்பிடுவதற்காக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கரும்புக்கட்டுகளை ஏற்றி சொல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை சாப்பிடுவது தொடர் கதையாகி வருகிறது. அதேபோல், சாலை நடுவே நின்று கொண்டு பேருந்துகளை வழிமறிப்பதும் நடக்கும். இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

 

இந்த நிலையில், நேற்று இரவு பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை திடீரென பண்ணாரி கோவில் முன் மைசூர் நெடுஞ்சாலை ரோட்டில் நடமாடியது. இதைத் கண்ட கடைக்காரர்கள், பக்தர்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். யானை அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றதை கண்ட பக்கர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு அந்த ஒற்றை யானை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. இதன் பிறகு பொதுமக்கள் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்