single elephant roaring for 20 days in sathyamangalam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று கடந்த 20 நாட்களுக்கு மேலாக கேர்மாளம் ஊராட்சிக்கு உட்பட்ட கானக்கரை, ஜே.ஆர்.எஸ்.புரம், பூதாளபுரம் ஒருத்தி, தழுதி மற்றும் கேர்மாளம், சித்த நாயக்கனூர், ஆகிய கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்ளை நாசம் செய்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் சித்த நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து(45) என்பவருக்கு வனப்பகுதியை ஒட்டி 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய தோட்டத்து வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். விவசாய நிலத்தில் மக்காச்சோளம், ராகி, உருளைக்கிழங்கு ஆகியவை பயிரிட்டுள்ளார். மலைப்பகுதி என்பதால் பெரும்பாலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மாரிமுத்து மக்காச்சோளம் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை 1 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் சுமார் ஒரு லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி மாரிமுத்து வேதனையடைந்துள்ளார்.

Advertisment

அந்த யானையை விரட்ட முயன்றால் மனிதர்களை நோக்கி ஆக்ரோஷமாகத் துரத்தி வருகிறது. இதனால் விவசாயத் தோட்டத்தில் காவலில் இருக்கும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் தங்களது விவசாய தோட்டத்தில் விவசாயம் செய்வதற்காக விவசாயக் கடன் மற்றும் நகைகளை அடமான வைத்து விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை தேடி வரும் நிலையில் இந்த ஒற்றை யானை வீட்டின் பின்புறம் இருந்த 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க்யை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு மக்காச்சோளம் பயிர் விடுவதற்கு 60 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரையும், வேலை ஆட்கள், கூலி, நடவு பணி, மருந்து எனச் செலவு ஏற்படுகிறது. அதேபோல் ராகி ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாயும், உருளைக்கிழங்குக்கு ஒரு லட்ச ரூபாய் வரையும் செலவு ஏற்படுகிறது. இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டம் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நஷ்ட ஈடும் வழங்கவில்லை.

Advertisment

மேலும் அந்த ஒற்றை யானை அதே பகுதியை சேர்ந்த ஜடையை சாமி, ஆனந்தன், சிவண்ணா ஆகியோரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பயிரிட்டிருந்த மக்காச்சோளம் பயிர்களையும் சேதப்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதியில் கடந்த 20 நாட்களில் மட்டும் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளையும், சோலார் மின் வேலிகளையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த ஒற்றைக் காட்டு யானை அட்டகாசத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்ட வன அதிகாரிகள் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அந்த ஒற்றை காட்டு யானை மனிதர்களை தாக்கிக் கொல்லும் முன் சோலார் மின்வெளி அல்லது அகழி அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் வனப் பணியாளர்கள் குழு ஒன்று அமைத்து ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.

விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த யானைகளை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்