Skip to main content

''சிங்கார சென்னை 2.0 முதல் செஸ் ஒலிம்பியாட் வரை ''- தமிழக பட்ஜெட் 2022-23

Published on 18/03/2022 | Edited on 18/03/2022

 

 '' Singara Chennai 2.0 to Chess Olympiad '' - Tamil Nadu Budget 2022-23

 

2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவையில் இன்று காலை துவங்கியது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

 

நிதி நிர்வாகத்துறையில் நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 1,461.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் ராமநாதபுரத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். பூண்டி, தருமபுரி, குற்றாலத்தில் அகழ்வைப்பகங்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் 5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். அரசுப்பள்ளிகளை நவீனமாக்க பேராசியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவரப்படும். ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் 7,000 கோடி ரூபாயில் அரசுப்பள்ளிகள் நவீனப்படுத்தப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை இலவச பாடப்புத்தகங்கள் வழங்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுக்கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நான்கு இலக்கிய திருவிழாக்கள் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும். சுற்றுச்சூழல்துறைக்கு 849 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுயஉதவிக்குழுக்கள் மற்றும் விவசாயக் கடன்களுக்கு 4,130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

தீயணைப்புத்துறைக்கு 496.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் திறனை மேம்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வானிலையைத் துல்லியமாகக் கணிக்க சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வானிலை மேம்பாட்டுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படும். சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களைத் தடுக்க ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும். பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உணவு மானியமாக 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறைக்கு 13.176 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னையில் நவீன வசதிகளுடன் விளையாட்டு வளாகத்தை அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கத்தேடல் திட்டத்தின் கீழ் வீரர்களுக்கு பயிற்சியளிக்க 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் செஸ் ஒலிம்பியாட் ஒரு திருப்புமுனையாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித்திட்டம் என மாற்றப்படுகிறது. 6 முதல் 12 ஆம் வகுப்புவரை படித்து மேல்கல்விக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மேல்கல்வியை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 

 

இலவச மிதிவண்டி திட்டத்திற்கு 162 கோடி ரூபாய் ஒதுக்கீடு, தர்ஹாக்கள், தேவாலயங்களை புனரமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு 2,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சென்னை அருகே 300 கோடி ரூபாயில் தாவரவியல் பூங்கா, முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்களைச் சீரமைக்க 190 கோடி ரூபாய் ஒதுக்கீடு, ஆதரவில்லாத, கைவிடப்பட்ட விலங்குகளைப் பராமரிக்க வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு, செத்துமடை, ஏலகிரி ஆகிய பகுதிகளில் சூழல் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை மக்களுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் வீடுகட்டிக் கொடுக்க தமிழக அரசின் பங்காக 2,030 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைக்கு 26,647 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற பகுதிகளை பசுமையாக்க 500 பூங்காக்கள் அமைக்கப்படும். சென்னையை மேம்படுத்தும் சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிண்டி சிறுவர் பூங்காவை மறுவடிவமைத்து இயற்கைப்பூங்காவாக மாற்ற  20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்த ஏற்பாடு செய்யப்படும். மழைக்காலத்தில் தரைப்பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கும் இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈசிஆர் சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற 135 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 'நான் முதல்வன்' திட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் புத்தொழில் மையம் அமைக்க 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத்திற்கு 1,520 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடிக்கு 1,000 கோடி ரூபாயும், சுயஉதவி குழுக்களின் கடன் தள்ளுபடிக்கு  600 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிதிலமடைந்த ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களைச் சீரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு, இந்து சமய அறநிலையத்துறைக்கு 340.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த சிறப்பு நிதியாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்