singampatti zamin - Murugadoss Theerthapathi

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவிற்கு விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

Advertisment

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''தமிழகத்தின் மிகப் பழமையான ஜமீன்களில் ஒன்றான சிங்கம்பட்டி ஜமீன், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ளது. சிங்கம்பட்டி ஜமீனின் 31-வது ராஜாவாகப் பட்டம் சூட்டப்பட்டவர் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி. ஜமீன்தார் முறை ஒழிப்புக்கு பின்னர், இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிக் கொண்ட மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.

இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர், சங்க காலம் முதல் சமகால இலக்கிய எழுத்தாளர்களின் நூல்களை படிப்பதுடன், அது குறித்து விவாதிக்கக் கூடியவர். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட முருகதாஸ் தீர்த்தபதி, எட்டுக் கோயில்களின் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி நேற்று (24.05.2020) காலமானார்.

இந்நிலையில், ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்'' என கூறியுள்ளார்.