
இளையராஜாவுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என்று சிந்தனைச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், காட்டுமன்னார்கோயில் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிந்தனைச்செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வானிலை மையம் அறிவித்ததை விட 30 சென்டிமீட்டர் மழை காட்டுமன்னார்கோயில் பகுதியில் பெய்தது. இது தவிர ஜெயங்கொண்டம், அரியலூர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, வடிகாலாக விளங்கக்கூடிய காட்டுமன்னார்கோயில் தொகுதி வழியாக தண்ணீர் வெளியேறியது. அதனால் இந்த தொகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் பல கிராமங்கள் 3 நாள் வரை தண்ணீரில் மூழ்கியிருந்தது. 100 சதவீதம் பயிர் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே பெஞ்சால் புயல் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கியதைப்போல காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து ஒரு குடும்ப அட்டைக்கு ரூ 5 ஆயிரம் மற்றும் ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்கள் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் காட்டுமன்னார்கோயில் பேரிடர் பாதிப்பிற்கு உள்ளாகிறது. தண்ணீர் முறையாக வெளியேற சரியான வழி இல்லாததால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. வெள்ளியங்கால் ஓடையில் அதன் கட்டமைப்பை தாண்டி 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை வெளியேறி இருக்கிறது. சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை நீர்வழி ஆய்வுகளை மேற்கொள்ளாமல் கட்டப்பட்டுள்ளதால் வெள்ளநீர் வடியாமல் தடுப்பணையாக உள்ளது. அதனால் தமிழக அரசு ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்து இந்த இரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் நீர் வழி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் வடிந்த பிறகு பூர்வாங்க பணிகள்தான் மேற்கொள்ளப்படுகிறது. அதை விடுத்து தமிழக அரசு நீரியல் வல்லுனர்களைக் கொண்டு ஒரு நிரந்தர தண்ணீர் தேங்காமல் இருக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்படுகிறது. அதில் மக்கள் தங்குவதில்லை. அதனால் இயல்பு நிலை திரும்பி விட்டதாக அதிகாரிகள் நினைக்கிறார்கள். உணவு வழங்குவது போன்ற அடிப்படை பணிகளை தன்னார்வலர்கள்தான் செய்கிறார்கள். வெள்ளம் வடியும் வரை அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்கு அரசு ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இன்று தமிழக அரசியலில் வெறுப்பை விதைக்கிற போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக ஒரு பாடலும் வெளியாகி இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆகச்சிறந்த படைப்பாளி இசைவாணி மீது மணிப்பூரில் நடந்ததைவிட மோசமான கொடுமை அந்த சகோதரி மீது தொடுக்கப்பட்டு இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு சாதி அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் செயல்படுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கச் சிறப்பு புலனாய்வு பிரிவை உருவாக்க வேண்டும்.
1942 ஆம் ஆண்டு நந்தனார் என்ற திரைப்படம் வெளியானது. அதில் பட்டியல் சமூகத்து மக்களை சாதி பெயரை சொல்லி திட்டும் காட்சிகள் இன்றும் அப்படியே இருக்கிறது. இந்த காட்சிகளை பார்க்கும் இளைஞர்கள், யார் திட்டுகிறார்களோ அந்த சமூகத்தின் மீது கோபத்தை, வெறுப்பை காட்டும் நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தமிழக அரசு இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து விடும். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வேண்டுமானால் அதிபர் ஆட்சி முறை சரியாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயக முறை இருக்கிறது. இது மாநில உரிமைகளை, சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கும். அதனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பன்முகத்தன்மையை பாதிக்கும். அதனால் இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
இந்தியாவின் புகழ் பெற்ற அடையாளமான இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது. உள் நோக்கத்தோடு இது நடந்ததா என்பது விசாரணைக்கு உரியது. ஆனால் ஆளுமைகளை அழைத்துச் செல்லும்போது அதுபோன்ற நிகழ்ச்சிகள் முறையாக திட்டமிடப்பட வேண்டும். ஆகம விதிகளில் நடைமுறைகள் இருக்கும். ஆனால் அதை ஏற்றுக் கொள்பவர்கள்தான் கோயிலுக்கு செல்கிறார்கள். அதை முன்கூட்டியே சொல்லி முறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கருவறைக்குள்தான் நுழையக்கூடாதே தவிர, அர்த்த மண்டபத்துக்குள் விஐபிகள் செல்வது பெரும்பாலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன் அவருக்கு மட்டும் விதிவிலக்கு. அவர் உள்ளே சென்ற பிறகு வெளியேற்றும் நிகழ்ச்சி வருத்தத்தை, வேதனையை தருகிறது. இதுகுறித்து தமிழக அரசு முறையான விசாரணையை நடத்த வேண்டும்” என கூறினார்.
இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அரங்க தமிழ்ஒளி, முன்னால் மாவட்டச் செயலாளர் பால. அறவாழி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.