
தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவிய நேரத்தில் முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், காரோனா பணிகளுக்காக நிவாரண நிதி கோரியிருந்தார். சிறுவர்கள் உண்டியல் சேமிப்பு முதல் தொழிலதிபர்களின் கோடிக்கணக்கான காசோலை என நிவாரண நிதி கிடைத்துவந்தது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சின்னத்துரை தனது முதல் மாத சம்பளம் 1 லட்சத்தி 5 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு வரைவோலையாக பெற்று, இன்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் வழங்கினார். இவருடன் சி.பி.எம். மா.செ. கவிவர்மன் உள்பட ஏராளமானோர் சென்றனர்.
இது குறித்து சின்னத்துரை எம்.எல்.ஏ கூறும் போது, “என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்காக என் முதல் மாத சம்பளத்தை கரோனா பணிகளுக்காக வழங்குவதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.
இதே போல திருமயம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கரோனா நிவாரண நிதியாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் ரூ.2 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதே போல அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கடந்த வாரத்தில் தனது முதல்மாத சம்பளத்தை கரோனா ஊரடங்கால் உணவுக்காக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பசியை போக்க அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.