மதிமுக தலைவர் வைகோவின் உறவினர் கடந்த ஏப்ரல் 13 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டி தீக்குளித்தார். 90 சதவிகிதத்திற்கும் மேல் எரிந்து சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்த வைகோ கூறியது...

"என்னுடைய துணைவியார் ரேணுகா தேவியின் அண்ணன் ராமானுஜம் அவர்களின் மூத்த மகன் சரவணன் சுரேஷ், நேற்று காலை விருதுநகர் அருகே உள்ள சூரக்கரையில் திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு பற்றவைத்தார். பதறி வந்து தீயை அணைத்தவர்களிடம், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், GSTயை நீக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் அடிப்படை சிகிச்சை கொடுத்த பொழுது தெளிவாகப் பேசிய அவர், "என்னை காப்பாற்ற முயலாதீர்கள். என் உயிர் காவிரிக்காக போகட்டும்" என்று கூறியிருக்கிறார்.

பின்னர் அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தோம். ஏற்கனவே 2009இல் நான் நாடாளுமன்ற தேர்தலில் தோற்ற போது தீக்குளித்த எங்கள் கட்சி செயலாளர் அய்யனாரை இங்கு இரண்டரை மாதம் வைத்து காப்பாற்றினேன். நேற்று நான் மருத்துவர்களிடம் பேசிய பொழுதே, காப்பாற்ற வாய்ப்பு குறைவு என்று கூறினார்கள். முழுவதும் கருகிய அவரது உடலைக் காணும் மனவலிமை எங்களுக்கு இல்லை.

இந்த செய்தியைக் கேட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கவிஞர் வைரமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் என்னைத் தொடர்பு கொண்டு அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
நான் நேரடியாகப் பழகியிராத நடிகர் சிம்பு என்னைத் தொடர்பு கொண்டு, தொலைபேசியிலேயே கதறி அழுதார். "இந்தக் காட்சியைப் பார்த்து இரவெல்லாம் கடவுளை வேண்டினேன், அவர் பிழைக்க வேண்டுமென்று" என்றார். அரசியலுக்கு தொடர்பில்லாத அவரது மனிதாபிமானத்திற்கு நன்றி சொன்னேன்.
அனைத்தையும் தாண்டி அவர் மரணமடைந்தார். காவிரிக்காக நாம் உயிருடன் இருந்து போராட வேண்டும். இந்த மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது. நம் உரிமையைப் பெற நாம் உறுதியுடன் நின்று போராட வேண்டும். தலைமை நீதிபதி நீதியை கொன்றுவிட்டார். இப்படி நான் பேசுவதால் என் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தால் நான் தனியாளாக நின்று வாதாடுவேன்."