Skip to main content

மதிமுக நடத்தும் கையெழுத்து இயக்கம்;தோழமை கட்சிகள் பங்கேற்பு

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மதிமுக கையெழுத்து இயக்கம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

 

இது தொடர்பாக மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புவதும் காலதாமதம் செய்வதும் ஆளுநருக்கு வாடிக்கையாகி விட்டது. கல்லூரி இறுதி ஆண்டை முடித்துவிட்டு பட்டப்படிப்பு சான்றிதழை பெறவேண்டிய மாணவர்களின் எதிர்காலத்தையும், வேலை வாய்ப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் பட்டமளிப்பு விழாக்களுக்கு நேரம் தராமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருவதால் தங்கள் எதிர்காலம் குறித்த கவலையோடும், கண்ணீரோடும் 9.25 லட்சம் மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். கிடைத்த வேலைக்கும் செல்ல முடியாமல், பிடித்த வேலைக்கும் செல்ல முடியாமல் தமிழக மாணவர்கள் தவித்து வருகின்றார்கள். இதுகுறித்து கேட்டபோது, ஆளுநருக்கு நேரம் இல்லை என ஆளுநர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

 

திராவிட இயக்கங்களை கொச்சைப்படுத்துவதும், திராவிட மாடல் அரசை குறை சொல்வதுமே ஆளுநரின் அன்றாடப் பணிகளாக இருக்கின்றது. தனக்கு கிடைத்த மேடைகளை பயன்படுத்தி இந்துத்துவா கருத்துக்களையும், ஆர்.எஸ்.எஸ் மதவாத சித்தாந்தங்களையும் ஆளுநர் பரப்பி வருகின்றார். மதவாத சக்திகளின் ஏஜெண்டாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் செயல்பட்டு வருகிறார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை அப்பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் கேட்டுக் கொள்ளும் வகையில் மறுமலர்ச்சி தி.மு.க 20.06.2023 அன்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது.

 

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஏன் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை விளக்கி அவர்களிடமிருந்து ஒரு கோடிக்கும் அதிகமான கையெழுத்துக்களை பெறும் பணியை ம.தி.மு.க முழு வீச்சில் செய்து வருகிறது. பொதுவுடைமை இயக்கத்தின் மிக மூத்த தலைவரும், கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரும், தமிழ்நாட்டின் நலனுக்காக அதிக நாட்கள் சிறையில் வாடிய தலைவருமான ஐயா ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்துள்ளார்.

 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணன் கே.எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல்.திருமாவளவன் ஆகியோர் ம.தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்தார்கள். நான் நேரில் சென்று அவர்களிடம் கையெழுத்துக்களை பெற்றேன்.

 

இந்நிகழ்வின்போது, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், கழகப் பொருளாளர் பொறியாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், வழக்கறிஞர் சைதை ப. சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நெருங்கும் தேர்தல்; 3 கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி உடன்பாடு?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
DMK constituency agreement with 3 parties

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தேர்தல் அறிக்கை உருவாக்கவும் தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி ம.தி.மு.க., இ.யூ.மு.லீ., கொ.ம.தே.க ஆகிய 3 கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (24.02.2024) நடைபெற்றது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க., இ.யூ.மு.லீ., கொ.ம.தே.க ஆகிய 3 கட்சிகளுடன் திமுக இன்றே தொகுதிப் பங்கீட்டை அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் வர உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த 3 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்று நடைபெற்ற திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்குப் பின் மதிமுகவின் அர்ஜுன ராஜ் தெரிவிக்கையில், “தி.மு.க.வுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது.  இரண்டு மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மதிமுக சார்பில் கேட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார். 

Next Story

பட்டாசு ஆலை விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துரை வைகோ நேரில் ஆறுதல் 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள இராமுத்தேவன்பட்டி பட்டாசு ஆலைவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ. மேலும், “திடீரென்று உயிரிழப்பைச் சந்தித்துள்ள இக்குடும்பத்தினரின் வருவாய் ஆதாரத்திற்கு ஏதேனும் அரசுப் பணி வழங்கிட வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு முன்வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, இராமுத்தேவன்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 10 பேர் இறந்துவிட்டனர். வெடி விபத்து நடைபெற்ற அன்று, மாவட்ட ஆட்சியரும், சாத்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமனும் நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். வருவாய் ஈட்டும் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் அக்குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், மூன்று இலட்ச ரூபாய் நிவாரண உதவியினை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரனும் வழங்கி இருக்கிறார்கள். பட்டாசு ஆலை நிர்வாகத்தின் சார்பில் தலா ஐந்து இலட்ச ரூபாய் இழப்பீட்டு நிவாரணமாக வழங்கி உள்ளார்கள்.

ஒன்றிய அரசின் சார்பில் இரண்டு இலட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். அந்த நிவாரணத் தொகை இன்று வரை வந்து சேரவில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என்னிடம் முறையிட்டனர். அதனை விரைவாக வழங்கிட முன்வர வேண்டும் என்று ஒன்றிய அரசைக் வலியுறுத்துகிறேன். மேலும் திடீரென்று உயிரிழப்பைச் சந்தித்துள்ள இக்குடும்பத்தினரின் வருவாய் ஆதாரத்திற்கு ஏதேனும் அரசுப் பணி வழங்கிட வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு முன்வைக்கிறேன்.

ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசுகளைத் தயாரித்ததன் விளைவாகத்தான் விபத்து நிகழ்ந்தது என்று எழுந்த புகாரின் பெயரில் வருவாய் துறை விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டாசு தயாரிப்புத் தொழிலில் உயிரிழப்புகள் நேராவண்ணம் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசையும், மாநில அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.

தவிர, 9 இலட்சத்து 85 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து, 30 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் சிறப்பாகச் செயலாற்றி வரும் தமிழக அரசு, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் நடைபெறும் பகுதிகளில் கூடுதல் தொழில் பேட்டைகளை உருவாக்கி பல்வேறு தொழில்களைத் தொடங்கி, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.