Siege of substation near Vriddhachalam !!!

Advertisment

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சியை அடுத்த ராஜேந்திரபட்டிணம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சரிவர மின்சாரம் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது. மேலும் முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின்வெட்டும் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும், பொதுமக்கள் குடிப்பதற்கு மின் மோட்டாரை இயக்க முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதையடுத்து நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் அதே பகுதியில் அமைந்துள்ள துணைமின் நிலைய அலுவலகத்திற்கு சென்று குறைகளை கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த மின் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவரிடம், “இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. வெளியே போ" என அசிங்கமாக பேசி வெளியே அனுப்பியதுடன், ‘மின்சாரம் அப்படிதான் வரும் உன்னால் முடிந்ததை செய்து கொள்’எனவும் ஆணவமாக கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று ஊராட்சி மன்றதலைவர் சுரேஷ் தலைமையில், துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மின் வாரிய அதிகாரிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கருவேப்பிலங்குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அவர்களிடத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட மின் துறை உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தியதன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.