
மோடி சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் குஷ்பு இருந்தபோது அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் 'மோடி என்ற பெயர் உள்ளவர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்களே; இனி மோடி என்ற பெயருக்கான பொருளை ஊடல் என மாற்றி விடலாம்' என குஷ்பு வெளியிட்டு இருந்த அந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2014 முதல் 2020 ஆம் ஆண்டு வரை காங்கிரஸில் இருந்த குஷ்பு அதற்குப் பின்பு பாஜகவில் இணைந்த நிலையில் தற்பொழுது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கிறார். தனது பழைய டிவிட்டர் பதிவு குறித்து விளக்கமளித்துள்ள குஷ்பு, ''காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்தபோது மோடியை விமர்சித்து பதிவிட்டது கட்சி தலைமையின் நிலைப்பாடு என்னவோ அதை ஒரு செய்தி தொடர்பாளராக பிரதிபலிக்க வேண்டி இருந்தது. பழைய டிவிட்டர் பதிவை தற்பொழுது பெரிதுபடுத்துவது காங்கிரசின் அறியாமையைக் காட்டுகிறது' எனக் கூறியுள்ளார்.