Advertisment

“ஆனந்தய்யாவை அழைத்து பேசி, மருந்திற்கு அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா?”- கேள்வி எழுப்பிய நீதிபதிகள்!

publive-image

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள கரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும் என விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கரோனா தொற்றை குணப்படுத்தும் வகையில் 2டிஜி எனும் மருந்தை, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டு பிடித்துள்ளது. அதை சந்தைக்கு கொண்டு வரக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஒரு ஆய்வகத்துக்கு மட்டும் இந்த மருந்தை உற்பத்தி செய்ய அனுமதியளித்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், டி.ஆர்.டி.ஓ. எனும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்த மருந்தை உற்பத்தி செய்வதற்கு இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களை கேட்டதாகவும், அதற்கு 40 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும், அந்நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மருந்து எப்போது சந்தைக்கு வரும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, இதுகுறித்த விவரங்களை வழங்குவதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 2 டிஜி மருந்து மூலம் 61 வயது முதியவர் இரு நாட்களில் குணமடைந்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதையடுத்து நீதிபதிகள், ஆந்திரா மாநிலம், கிருஷ்ணாம்பட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த மருந்து மூலம் அரை மணி நேரத்தில் கரோனா குணப்படுத்தப்படுவதாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவரை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் அழைத்து பேசி, அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா என கேள்வி எழுப்பினர். மேலும், சர்வதேச மருந்து மாபியாக்கள் காரணமாக இந்த மருந்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அங்கீகாரம் வழங்கியிருந்தால் ஆனந்தய்யா சர்வதேச அளவில் புகழடைந்திருப்பார் என்றும் தெரிவித்தனர். ஆனந்தய்யாவின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

இதையடுத்து 2 டி ஜி மருந்து உற்பத்தி எப்போது பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்த விவரங்களையும், ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும் என்பது குறித்தும் தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

corona Judge highcourt Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe