Should we seize land madras University campus build a women hostel

சென்னைப் பல்கலைக்கழத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டப்பட்டால் சென்னை பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கைக் குறையும். அப்படி ஒரு நிலை ஏற்பட தமிழக அரசே காரணமாகிவிடக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் இராமானுஜம் கணித ஆராய்ச்சி நிறுவனத்தின் பின்புறத்தில் மாணவிகள் விடுதி அமைந்துள்ள இடத்தில், பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவியரின் உயர்கல்வி வாய்ப்பை பறிக்கும் வகையில் செயல்படுத்தப்படவிருக்கும் இந்தத் திட்டம் கண்டிப்பாக கைவிட வேண்டும்.

Advertisment

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பெண்கள் வந்து சென்னையில் தங்கி பணி புரிகின்றனர். அவர்களுக்கு கட்டுப்படியாகும் செலவில், பாதுகாப்பான தங்கும் விடுதிகள் இல்லை என்பதிலும், அதைக் கருத்தில் கொண்டு பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகள் அரசால் அறிவிக்கப்பட்டிருப்பதை விட அதிக எண்ணிக்கையில் கட்டப்பட வேண்டும் என்பதிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அது மாணவிகளை பாதித்து விடக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கவலை ஆகும்.

தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் பயில்வதே பெருமை ஆகும். மொத்தம் 5 வளாகங்களில் இயங்கும் இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவிகள் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்து தங்கி படிக்கின்றனர். சேப்பாக்கம் வளாகத்தில் மாணவிகளுக்காக கட்டப்பட்டுள்ள விடுதிகள் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதால் மாணவிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவர்களின் துயரத்தைப் போக்கும் வகையில் புதிய விடுதி கட்டப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உயர்கல்வித்துறையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Advertisment

அதன்படி, சென்னைப் பல்கலைகக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் மாணவியர் விடுதி கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு பதிலாக சமூகநலத்துறையின் சார்பில் தோழி விடுதி கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்திருப்பது மாணவியரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தோழி விடுதிகளை கட்ட சென்னையில் ஏராளமான இடங்கள் இருக்கும் நிலையில், அவற்றை விடுத்து பல்கலைக்கழக மாணவிகள் தங்குமிடத்தை பறிப்பது நியாயமல்ல.

பல்கலைக்கழகங்களில் போதிய விடுதி வசதிகள் இல்லாவிட்டால் மாணவிகள் உயர்கல்வி கற்க முன்வர மாட்டார்கள். அது பெண்களின் கல்விக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். சென்னைப் பல்கலைக்கழத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டப்பட்டால் சென்னை பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கைக் குறையும். அப்படி ஒரு நிலை ஏற்பட தமிழக அரசே காரணமாகிவிடக் கூடாது.

எனவே, சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் தோழி விடுதி கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அந்த இடத்தில் மாணவியர் விடுதியை கட்ட வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசு கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் எந்தத் தேவைக்காகவும் எடுத்துக் கொள்ளப்படாது என்ற கொள்கைப் பிரகடனத்தையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.