Should students  go to school or not?

ஜூன் 14ம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்படும் என்றும், தலைமை ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் ஓர் உத்தரவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடந்த சில நாள்களுக்கு முன்பு பிறப்பித்தார். இந்த உத்தரவு, ஆசிரியர்களிடையே பல குழப்பங்களை மட்டுமின்றி, தகராறுகளுக்கும் வித்திட்டுள்ளதாகப் புலம்புகிறார்கள்.

Advertisment

இதுதொடர்பாக 'ஐபெட்டோ' அமைப்பின் பொதுக்குழு உறுப்பினரும், அரசுப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியருமான உதயகுமார் நம்மிடம் பேசினார். ஜூன் 14ம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுடன் இதர நிர்வாக ஊழியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

Should students  go to school or not?

இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. கரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து பயில எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எல்.கே.ஜி. முதல் பிளஸ்1 வரை மாணவர் சேர்க்கை நடத்துதல், விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், மாற்றுச்சான்றிதழ், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட உலர் உணவுப்பொருள்கள் வழங்குதல், கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான பணிகளைச் செய்தல், பள்ளி வளாகம், வகுப்பறைகளைத் தூய்மைப்படுத்துதல், தண்ணீர் வசதி செய்தல் ஆகிய பணிகளையும் செய்ய வேண்டும் எனச் சுற்றறிக்கையில் சொல்லப்பட்டு உள்ளது.

Advertisment

இந்த உத்தரவில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால், அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர் மட்டும் பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கை முதல் பள்ளிக்கூடத்தைப் பெருக்கி சுத்தப்படுத்துவது வரை அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டும் என்பதுதான். பல தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பெண்கள்தான் தலைமை ஆசிரியர்களாக உள்ளனர். அவர்கள் மட்டுமே ஒண்டியாகச் சென்று இத்தனை பணிகளையும் செய்து விட முடியாது. மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் பெண் தலைமை ஆசிரியர்களைப் பற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், அதிகாரிகளும் கொஞ்சமும் சிந்திக்கவில்லை.

மேற்கு மாவட்டங்களில் உள்ள பல தலைமை ஆசிரியர்கள், பள்ளி பணிக்காக தங்கள் பள்ளிகளில் பணியாற்றி வரும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை பணிக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதற்கு அவர்கள், அரசு உத்தரவில் எங்களைப் பற்றி எதுவும் கூறவில்லை என்று கூறி தட்டிக்கழிக்கின்றனர்.

பொது போக்குவரத்து வசதி இல்லாத இப்போதைய காலகட்டத்தில் ஒரே ஆசிரியர் தனியாக வாடகை வாகனம் மூலம் தினமும் பள்ளிக்கு வந்து செல்வது இயலாத காரியம். எல்லா ஆசிரியர்களையும் பணிக்கு வரவழைக்க வேண்டும் அல்லது சுழற்சி முறையிலாவது இதர ஆசிரியர்களையும் பணிக்கு அழைக்க வேண்டும்'' என்கிறார் உதயகுமார்.

இன்னொரு பெயர் கூற விரும்பாத ஆசிரியர் சங்க நிர்வாகியோ, ''அதிமுக ஆட்சியின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன், காலையில் சொன்ன உத்தரவை மாலையில் மாற்றி விடுவார். பல நேரம் அவர் துறையில் நடப்பது அவருக்கே தெரியாத அளவுக்கு அவரும் குழம்பி, ஆசிரியர்களையும் குழப்பத்திலேயே வைத்திருந்தார். அவரைப்போலவே இப்போதுள்ள திமுக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் சொதப்பி வருகிறார். திமுக கட்சி அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியரை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தியது; பள்ளிக்கல்வித்துறையை முழுமையாக ஸ்டடி செய்வதற்குள்ளாகவே காலங்காலமாக இருந்து வந்த இயக்குநர் பணியிடத்தை ஒழித்துக்கட்டியது; பிளஸ்2 பொதுத்தேர்வு விவகாரத்தில் சரியான முடிவெடுக்காதது எனத் தொடர்ந்து சொதப்புகிறார்.

பூட்டிக்கிடந்த பள்ளிகளை எல்லாம் திறந்து ஆய்வு செய்து வருவது வியப்பாக இருக்கிறது. காலங்காலமாகப் பள்ளி வேளையில்தான் பார்வையிடும் பணிகள் நடக்கும். அமைச்சர் ஒருவர், ஒன்றரை ஆண்டாகப் பூட்டிக்கிடக்கும் பள்ளிகளைத் திறந்து ஆய்வு செய்து வருவது வரலாற்றில் இதுதான் முதல்முறை. இதற்காக பல மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், உயரதிகாரிகள், அனைத்துப்பாட ஆசிரியர்கள் என நாற்பதுக்கும் மேற்பட்டோரை அழைக்கிறார். அப்போதெல்லாம் பரவாத கரோனாவா, பள்ளி பணிகளைச் செய்வதற்காக அனைத்து ஆசிரியர்களையும் அழைக்கும்போது வந்துவிடப் போகிறது?'' எனக் கேள்வி எழுப்புகிறார்.

Should students  go to school or not?

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் சந்திரசேகர் கூறுகையில், ''பள்ளிகளில் 'எமிஸ்' பணிகளைச் செய்தல், அட்மிஷன் பணிகளில் உதவியாக இருக்க இதர ஆசிரியர்களைத் தலைமை ஆசிரியர்கள் அழைத்திருக்கிறார்கள். அவர்களிடம் மற்ற உதவி ஆசிரியர்கள் சண்டைக்குச் சென்றிருக்கிறார்கள்.

நீண்ட விடுமுறைக்குப் பிறகு மகிழ்ச்சியாகப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய ஆசிரியர்களுக்குள், அரசு உத்தரவால் சண்டையும் மனக்கசப்பும் உருவாகியுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் ஜூன் 14ம் தேதி முதல் இதர ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதில் மட்டும்தான் குழப்பம். ஆனால், தளர்வுகள் அறிவிக்கப்படாத சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டுமா இல்லையா என்பதிலேயே பெரும் குழப்பம் இருக்கிறது.

மாணவர் சேர்க்கை மட்டுமின்றி, மத்திய அரசு மாணவர்களுக்கு தலா 1200 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான வங்கிக் கணக்கு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். இவற்றையெல்லாம் தலைமை ஆசிரியர் மட்டுமே செய்துவிட முடியாது. கிராமங்களிலும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. நான் பணியாற்றும் சேலம் மாவட்டம் தப்பக்குட்டை என்ற சிறிய கிராமத்தில் மட்டும் 17 பேர் கரோனாவால் இறந்துள்ளனர். பக்கத்தில் உள்ள கன்னந்தேரி கிராமத்தில் 16 பேர் நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் மாணவர்களையும், பெற்றோர்களையும் பள்ளிக்கு வரவழைத்து அட்மிஷன் நடத்துவது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது. அமைச்சரும் குழம்பி, ஆசிரியர்களையும் குழப்பி இருக்கிறார். இப்பிரச்சனையில் தெளிவான வழிகாட்டுதல்கள் வேண்டும்'' என்றார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் பொன்னையா ஆகியோரின் செல்போன் எண்ணுக்கு முயற்சித்தோம். எடுக்கவில்லை.

Should students  go to school or not?

கடைசியாக நாம் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தியிடம் பேசினோம். அவர், ''சேலம் மாவட்டத்திற்கு ஊரடங்கில் தளர்வுகள் எதுவும் கொடுக்கவில்லை. பள்ளிக்கூடத்திற்கு வாத்தியார்கள் யாரையும் போகச்சொல்லவில்லை. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை மாணவர் சேர்க்கையை போன் மூலம் போட்டுக் கொள்ளலாம். தலைமை ஆசிரியர்கள் மட்டும் போகச்சொல்லி உத்தரவு இருக்கிறது. அவர்கள் போனாலும் போகலாம்... இல்லைனாலும் பரவால. பள்ளிக்கூடத்துக்கு போறதுல என்ன இருக்கு... மற்ற ஆசிரியர்கள் போகத்தேவை இல்ல. தளர்வுகள் உள்ள மாவட்டத்துல நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்துவாங்க. தளர்வுகள் இல்லாத மாவட்டங்களில் போன் மூலமாக போட்டுக்க வேண்டியதுதான்'' என்றார் சி.இ.ஓ. கணேஷ்மூர்த்தி.