‘Should get married immediately’ - A young man who is obsessed with his mother

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ளது புதுக்குப்பம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பிலவேந்திரன். தந்தையை இழந்த அருளப்பன்(20) தனது தாய் ஜோசப் மேரியுடன் வசித்து வந்துள்ளார். இவர் அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டையைச்சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக தன் தாயிடம் தொடர்ந்து கூறிவந்துள்ளார் அருளப்பன். மகன் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருப்பதைப் புரிந்து கொண்ட அவரது தாய் ஜோசப் மேரி, அருளப்பன் காதலித்து வந்த பெண்ணின் பாட்டியிடம் சென்று பெண் கேட்டுள்ளார்.

Advertisment

ஆனால் அவரது பாட்டி அருளப்பனிடம், பெண் படித்துக் கொண்டிருக்கிறார், அவரது படிப்பு முடியட்டும் அப்போது அவரது திருமண வயதும் 18 கடந்துவிடும் அப்போது உங்கள் இருவருக்கும் உறுதியாக திருமணம் செய்து வைப்பேன் என்று கூறியுள்ளார். ஆனால் அருளப்பன் தான் காதலிக்கும் பெண்ணை உடனடியாக திருமணம் செய்து வைத்தே ஆக வேண்டும் என்று கேட்டு தன் தாயிடம் அடம்பிடித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தாய் சம்மதிக்க வைப்பதற்காக வீட்டில் விவசாய நிலத்தில் தெளிப்பதற்காக வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார் அருளப்பன். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அருளப்பனை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

Advertisment

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காதலித்த பெண்ணை உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தாயை மிரட்டி பணிய வைப்பதற்காக விஷம் குடித்த வாலிபர் அதற்குப் பலியான சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.