Skip to main content

கடை அடைப்பு, சாலை மறியல்.. கடைமடை விவசாயிகளுடன் அனைத்துகட்சிகள், வர்த்தக சங்கங்கங்கள் பங்கேற்பு!

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
protest


காவிரி கரையோர விவசாயிகள் தண்ணீரிலும்.. கடைமடை விவசாயிகள் கண்ணீரிலும் தத்தளிக்கும் நிலையில் கடைமடைக்கு தண்ணீர் கொடு என்ற முழக்கத்துடன் கடந்த மாதம் 22 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை தொடங்கினார்கள். 4 நாட்கள் தொடர்ந்த போராட்டத்தில் விவசாயிகளுடன் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றதால் போராட்டம் நெடுவாசல் போராட்டம் போல விரிவடைந்தது. இதனைக் கண்ட அதிகாரிகள் அவசர அவசரமாக பேச்சுவார்த்தை நடத்தில் 10 நாட்களுக்கு தொடர்ந்து 250 கனஅடி வீதம் தண்ணீர் வரும் என்று வாக்குறுதி கொடுத்து போராட்டத்தை கைவிடச் செய்தனர். அதிகாரிகள் சொன்னது போல 200 கன அடி வீதம் 5 நாட்கள் மட்டும் வந்தது. பிறகு வழக்கம் போல நிறுத்தப்பட்டு 3 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் செல்கிறது.

இந்த நிலையில் தான் கடைமடை பாசனத்தில் அதிகம் பயன்பெரும் பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிப் பக்கம் தண்ணீர் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்பதால் தொடர்ந்து சாலை மறியல் அரசு அலுவலகங்கள் முற்றுகை போராட்டங்களை நடத்திய விவசாயிகள் 10 நாட்களுக்கு முன்பே 4 ந் தேதி கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் என்று அறிவித்தனர். இந்தப் போராட்டத்திற்கு அ.தி.மு.க, பா.ஜ.க தவிர மற்ற அனைத்துக் கட்சி பொருப்பாளர்களும் துணை நிற்போம் என்றனர். அதே போல அனைத்து வர்த்தக அமைப்புகளும் விவசாயிகள் பக்கம் நிற்போம் என்றனர்.
 

protest


அறிவித்தபடி இன்று பட்டுக்கோட்டை பேராவூரணி தொகுதியில் முழு கடையடைப்பு செய்தனர் வர்த்தகர்கள். 10 மணி முதல் பட்டுக்கோட்டையில் பேருந்து நிலையம் அருகே திரண்ட விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர் அதிகாரிகள் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், அனைத்துக் கட்சியினர் வணிகர்கள் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல பேராவூரணியில் திரண்ட விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் வர்த்தகர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்த அதிகாரிகள் 20 ந் தேதிக்குள் தண்ணீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று உறுதிமொழி அளித்தனர். அதன் பிறகு சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
 

protest


போராட்டத்தில் இருந்த முன்னால் பேரூராட்சித் தலைவர் அசோக்குமார்.. ஒவ்வொரு வருடமும் கடைமடை பகுதி வஞ்சிக்கப்படுகிறது. இந்த ஆண்டு காவிரி கரையோரத்தில் வெள்ளப்பெருக்கால் கடையோர விவசாயிகள், விவசாய நிலங்கள் தண்ணீரில் மிதக்கிறார்கள். அதனால் கடைமடைக்கு தண்ணீர் வரும் விவசாயம் செழிக்கும் என்று காத்திருந்த நேரத்தில் தான் கடைமடைக்கு தண்ணீர் வராமல் கடைமடை விவசாயிகளை கண்ணீரில் தத்தளிக்கவிட்டுள்ளனர் என்றார். மேலும் அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் சொல்லும் சமாதானத்தையே இப்பவும் சொல்லி இருக்கிறார்கள். இந்த முறையும் நம்பி போராட்டத்தை கைவிடுகிறோம். தண்ணீர் வரவில்லை என்றால் மறுபடியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். அப்போது அரசாங்கமே தண்ணீரை கொண்டு வந்த பிறகே போராட்டம் கைவிடுவோம் என்றார் ஆவேசமாக.

தண்ணீர் வந்தால் அந்த தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தை நம்பாமல் நாடியம், களத்தூர், குருவிக்கரம்பை, நெடுவாசல், போன்ற கிராம இளைஞர்களும், விவசாயிகளும் சொந்த பணத்தில் குளம், ஏரிகளை தூர்வாரியதுடன் வரத்து வாய்க்கால்களையும் மராமத்து செய்து தண்ணீருக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் தண்ணீர் தான் வரவில்லை. கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் கொடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க சார்பில் தஞ்சை, நாகுடி பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்