
காரைக்காலில் குழந்தை விற்பனை தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
காரைக்கால் திருநள்ளாறு கருக்கங்குடி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருடைய மகனுக்கு திருமணம் நிகழ்ந்து 10 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டில் மகன் வேலை செய்துவரும் நிலையில் வீட்டுக்கு அனுப்பும் பணத்தை சேர்த்து வைத்து கடந்த 10 நாட்களுக்கு பிறந்து பத்து நாட்களே ஆன பெண் குழந்தையை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு லட்சுமி வாங்கி மருமகளிடம் கொடுத்து வளர்க்க சொல்லியுள்ளார்.
திடீரென லட்சுமி வீட்டில் பெண் குழந்தை இருப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து திருநள்ளாறு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் லட்சுமி வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். லட்சுமி மற்றும் அவருடைய மருமகள் ஆகியோர் பெண் குழந்தை தங்களுடைய குழந்தை என பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் காட்டியுள்ளனர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானது என்று தெரிய வந்தது. அதே பகுதியைச் சேர்ந்த நஃபியா பேகம் என்பவர் மூலம் குழந்தையை வாங்கியது தெரியவந்தது. அதேபோல் அரசு மருத்துவமனை ஊழியர் பஞ்சமூர்த்தி என்பவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்ததும் தெரிய வந்தது. ஏஜென்ட்களாக செயல்பட்டவர்கள், நகராட்சி ஊழியர் சந்திரசேகர், அவருடைய நண்பர்கள் ஆல்பர்ட், வினோத், லட்சுமி அவரது கணவர் சதாசிவம் என மொத்தம் பத்து பேர் திருநள்ளாறு போலீசார் குழந்தை விற்பனை மற்றும் போலி சான்றிதழ் தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குழந்தை விற்பனையில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சீர்காழி மற்றும் பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்களை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். இதில் சட்டவிரோதமாக பிரசவம் பார்த்த ஜோதி என்ற பெண் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பரிதா பேகம் என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால் காரைக்கால் குழந்தை விற்பனை சம்பவத்தில் கைது எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.