Skip to main content

இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள்! 

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

Shocking news of youth case

 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகிலுள்ள கூனிமேடு பகுதியில் உள்ள நொச்சிக்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி. இவரது மகன் அபினேஷ்(23). 2020ஆம் ஆண்டு நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களை இவர் கொலை செய்து புதைத்ததாக மரக்காணம் போலீசாரால் அபினேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து சென்று கொலை செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் நொச்சிக்குப்பம் பகுதியிலிருந்து தங்கள் வீட்டை காலி செய்துவிட்டு சோதனை குப்பம் பகுதிக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். 

 

ஜாமீனில் வெளியே வந்த அபினேஷ், பெற்றோர்களுடன் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள மரக்காயர் தோப்பு பகுதியில் அபினேஷ் தலை மற்றும் முகத்தில் ரத்த காயங்களுடன் கொலைசெய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு கொட்டகுப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 


அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவாரத்தினம், முத்துக்குமார், தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அபினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அபினேஷ் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.


அதேசமயம், குற்றவாளிகளை கைது செய்யுமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவிட்டிருந்தார். அபினேஷ் ஏற்கனவே ஓரினச்சேர்க்கையில் இரண்டு சிறுவர்களை கொலை செய்த முன்விரோதத்தின் காரணமாக கொலை செய்யப்பட்டாரா வேறு ஏதேனும் காரணம் உண்டா என விசாரணையை துவங்கினர். 

 

இந்நிலையில், கோட்டக்குப்பம் தனிப்படை போலீசார் அபினேஷ் கொலையில் மூவரை கைது செய்துள்ளனர். இவர்கள் புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ்(20), கோட்டக்குப்பம் ரஹ்மத் நகரை சேர்ந்த அஜித் ராஜ்(22), அய்யனார் கோயில் மேட்டை சேர்ந்த அகமத் அசேன்(22). கைதான இவர்களிடம் நடத்திய விசாரணையில், அபினேஷ் கோட்டகுப்பம் வந்தபிறகு கலையரசன் என்பவரை கொலை செய்ததாகவும் அதற்கு பழிவாங்க அவரை கொலை செய்ததாகவும் மூவரும் அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளனர். 


அதுகுறித்து போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அபினேஷ் கோட்டகுப்பம் சோலைநகர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த வீட்டின் அருகில் உள்ள மாடி வீட்டில் மீனவரான விண்ணரசன் தனது மனைவி, 7 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். விண்ணரசன் மகனிடம் அபினேஷ் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதை அறிந்த விண்ணரசன் தனது சித்தப்பா கலையரசனுடன் கடந்த 4ஆம் தேதி அபினேஷ் வீட்டுக்குச் சென்று அபினேஷை கண்டித்துள்ளனர். அதற்கு அபினேஷ், ‘என்கிட்ட வம்பு வச்சுகிட்டா இரண்டு பேரையும் கொலைசெய்து விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். மறுநாள் 5ம் தேதி சோலை நகர் கடற்கரை பகுதியில் கலையரசன் இறந்து கிடந்துள்ளார். அவரை அபினேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். ஆனால் புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீசார் உரிய விசாரணை நடத்தாமல் கலையரசன் உடல் நலக்குறைவால் இறந்து கிடந்ததாக கூறி வழக்கை முடித்து சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.


கலையரசன் சாவுக்கு அபினேஷ் தான் காரணம் என்பதை பலர் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள். இதையடுத்து கலையரசனின் உறவினர் சதீஷ் என்ற தேசமுத்து அபினேஷ் மீது கடும் கோபத்தில் அவரை பழிக்கு பழி கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 8ஆம் தேதி அவரது நண்பர்கள் அப்பு என்கிற ஜவகர், அஜித் ராஜ், அகமது அசேன், அரவிந்த் ஆகியோருடன் சேர்ந்து அபினேஷை தேடி அவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். வீட்டில் அபினேஷ் இல்லாததால் அங்கிருந்து திரும்பி வரும்போது மரக்காயர் தோப்பு வழியாக வந்துள்ளனர். 


அங்கு அபினேஷ் இருப்பதை பார்த்தனர். அங்கேயே அபினேஷின் தலை மற்றும் உடலில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். தனிப்படை போலீசார் கொலையாளிகளை விரைந்து கைதுசெய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த அவர்கள் வழக்கு பதிவு  செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கொலையில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள அப்பு, அரவிந்த், ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்