அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியான பகீர் தகவல்!

ajithkumar

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்தரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார் அஜித்குமாரை சுற்றி நின்று தாக்குவதைக் கோவிலின் கழிவறையிலிருந்து இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ காட்சி நீதிமன்றத்தில் ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ காட்சி இந்த வழக்கில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்தது. 

இந்நிலையில் அஜிக்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அஜித்குமார் உயிருடன் இருக்கும்போது அவரது உடலில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவரது இடது கையில் 3 இடங்களில் சிகரெட் சூடு கண்டறியப்பட்டுள்ளன. மண்டை ஓட்டின் இரு பக்கங்கள், நடுமண்டை மற்றும் தலைப்பகுதி முழுவதுமாக கட்டையால் அடித்த காயம் உள்ளது. நாக்கைக் கடித்ததை போன்ற நிலையில் உள்ளது; தலையில் அடிபட்டதால் வலிப்பு ஏற்பட்டுள்ளது. கண்கள் சிவந்து வீங்கியுள்ளன. காதுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடலில் 6 பெரிய காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதயத்தில் இரு இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளன. அதே போன்று கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. 

அதோடு தலையில் கடுமையாகத் தாக்கப்பட்டதால் மண்டை ஓடு உடைந்து மூளையில் இரு இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் அந்த மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும், வயிற்றின் தொப்புள் அருகே தொடர்ந்து  கம்பால் தாக்கப்பட்டதால் குடலில் கொடூரமான காயங்கள் மற்றும் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் 50 வெளிப்புற காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. உடலில் ஏற்பட்ட காயங்களில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டதற்கான ஆதாரங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த கொடூரத் தாக்குதலின் போது அஜீத் குமாருக்குக் கஞ்சா கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Information report sivagangai thirupuvanam
இதையும் படியுங்கள்
Subscribe