
சேலத்தில் சொத்து தகராறில் கிரில் பட்டறை உரிமையாளரைக் கொல்ல கூலிப்படை கும்பலுக்கு 1.50 லட்சம் ரூபாய் கூலி கொடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பள்ளப்பட்டி கோரிக்காடு பகுதியில் இரும்பு கிரில் பட்டறை வைத்துள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பட்டறைக்கு வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் சிவக்குமார் மற்றும் அங்கு வேலை செய்து வந்த இரண்டு ஊழியர்களை சரமாரியாக வெட்டினர். பலத்த காயம் அடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இது தொடர்பாக சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த பாபு (32), அவருடைய உறவினர் விமல்ராஜ் (28), கிஷோர் (23), பாபுவின் மனைவி நந்தினி (30) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கிரில் பட்டறை உரிமையாளரான சிவக்குமாரின் தந்தை கந்தசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கடன் பிரச்சனையில் சிக்கியிருந்தபோது பாபுவின் மாமனார் ஏழுமலை 4.80 லட்சம் ரூபாய் கொடுத்து பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார். அந்த உதவிக்கு ஈடாக அப்போது கந்தசாமி வசித்து வந்த வீட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், கந்தசாமி மறைவுக்குப் பிறகு, வீட்டை எழுதி கொடுக்க சிவக்குமார் மறுத்துள்ளார். இது தொடர்பாக சிவக்குமாருக்கும் பாபு தரப்புக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. தற்போது அந்த வீட்டின் மதிப்பு 90 லட்சம் ரூபாய் இருக்கும். அதனால் இடையூறாக இருக்கும் சிவக்குமாரை தீர்த்துக் கட்டிவிட்டால் அந்த சொத்தை எடுத்துக் கொள்ளலாம் எனக்கருதி பாபு கூலிப்படையை வரவழைத்து சிவக்குமாரை கொலை செய்ய திட்டம் வகுத்துக் கொடுத்தது தெரிய வந்தது.
இதற்காக ஈரோடு, தூத்துக்குடியைச் சேர்ந்த கூலிப்படைக்கு 1.50 லட்சம் ரூபாய் பாபு கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கூலிப்படையினரைப் பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், கூலிப்படையினர் ஈரோட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று, கூலிப்படையைச் சேர்ந்த கருங்கல்பாளையம் பரத் (23), பாலமுருகன் (21), சாமுவேல் (21) ஆகியோரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.