Shocking information released during the police investigation

அரியலூர் மாவட்டத்தில் உள்ளது அமிர்த ராயன்கோட்டை என்னும் ஊர். இந்த ஊரைச் சேர்ந்த சந்திரகாசன் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி 85 வயது காமாட்சி. இவர்களுக்கு 3 மகள்கள், இரு மகன்கள் உள்ளனர். அதில் 3 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். ஒரு மகன் இறந்துவிட்ட நிலையில், இளையமகன் 40 வயது செல்வம் திருமணமாகி மனைவி பிள்ளைகளுடன் அதே ஊரில் தனியாக வசித்துவருகிறார். இவரது தாயார் காமாட்சி தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காமாட்சி காணாமல் போனார். மகன் செல்வம், மகள்கள், உறவினர்கள் பல்வேறு இடங்களில் காமாட்சியை தேடிவந்தனர்.

Advertisment

ஆனால் காமாட்சி கிடைக்கவில்லை. இந்த நிலையில் தாய் இறந்த துக்கத்தை தாங்க முடியவில்லை என்று கூறி அவரது மகன் செல்வம் விஷ மருந்து குடித்துவிட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். காமட்சி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் அவரது மூத்த மகள் சுமதி தா.பழூர் காவல் நிலையத்தில் தனது தாயாரைக் கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வத்திடம் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியுள்ளார்.

Advertisment

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடிவிசாரணையை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது தாய் காமாட்சியைக் கொலை செய்ததாக கூறியுள்ளார். இதை கேட்டு போலீசார் உட்பட அவரது உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செல்வம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது உடன் பிறந்த சகோதரன் இறந்துவிட்டார். மூன்று பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து கொடுத்தாகிவிட்டது. எனது தாயார் பெயரில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை என் பெயருக்கு எழுதித் தரும்படி கேட்டேன். தாயார் தர மறுத்துவிட்டார். இது சம்பந்தமாக எனக்கும் எனது தாயாருக்கு அடிக்கடி சண்டை நடந்துவந்தது. அவர் அந்த நிலத்தை எனக்கு எழுதித் தராமல் எனது மூத்த சகோதரி சுமதி பெயருக்கு எழுதி கொடுப்பதற்கு முடிவு செய்திருந்தார்.

இதை அறிந்த நான் அவரை உயிரோடு விட்டு விட்டுவைத்தால் நிலத்தை மகள் பெயருக்கு எழுதிக் கொடுத்துவிடுவார் அதனால் இனி அவரை உயிரோடு விட்டு வைக்கக்கூடாது அவரை கொலை செய்வது என்று முடிவு செய்தேன். சம்பவத்தன்று தனித்து வசித்து வந்த என் தாயார் வீட்டுக்குச் சென்றேன். யாருக்கும் தெரியாமல் சத்தம் இல்லாமல் அவரை கொலை செய்து எங்கள் ஊரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணைகுடம் ஓடைக்கு கொண்டு சென்று புதைத்து விட்டேன். என் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தாய் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் விஷம் அருந்தியது போன்று நடித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து கொண்டேன். இப்படி நாடகம் ஆடியதாக செல்வம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின், தாயார் காமாட்சியை கொலை செய்து புதைத்த இடத்தையும் போலீசாருடன் வந்து அடையாளம் காட்டியுள்ளார். அந்த இடத்தை போலீசார் தோண்டி புதைக்கப்பட்டிருந்த காமாட்சியின் உடலை எடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு மீண்டும் புதைத்துள்ளனர். சொத்துக்காக தாயை கொலை செய்து புதைத்து விட்டு தற்கொலை நாடகமாடிய ஒரு மகனின் செயல் அரியலூர் மாவட்ட மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.